சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளது ‘புதிது’ செய்தித்தளம்: அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் றாஸிக் சாடல்

🕔 July 10, 2021

பேசித் தீர்க்க வேண்டிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஓர் அற்பமான உள்வீட்டு விவகாரம் தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளம் ஊடக தர்மங்களைத் தாண்டி எழுதியுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரும், தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. றாஸிக் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடக தர்மங்களைத் தாண்டி ‘புதிது’ செய்தித்தளம் இந்த விடயத்தை எழுதியுள்ளதால், ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி’ என்பது போல், சர்ச்சையொன்று வெளியே வந்து வெடித்திருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘புதிது செய்தித்தளத்துக்கு திறந்த மடல்’ எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்களை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்;

“அக்கரைப்பற்று பிரதேசவாதத்தின் நச்சுப்பற்களை பிடிங்கி எறிய, அட்டாளச்சேனை ஒன்றிணைய வேண்டுமென்று ‘புதிது’ செய்தித்தளம் எழுதியுள்ளமையானது, இரு தேசத்திலும் இரண்டறக் கலந்த ஒவ்வொருவருக்கும் வேதனையை தருவதோடு, சற்று சிந்திக்கவும் வைக்கிறது.

எழுதியவரின் நோக்கமும், எண்ணக்கருவும் எதுவாக இருப்பினும் அப்பாவி மக்களின் வெற்று இதயங்களில் ஒருபுறத்தில் வேதனையும், மறுபுறத்தில் வஞ்சகமும் வளரத் தொடங்கியிருக்கிறது.

உங்களின் வார்த்தைப் பிரயோகங்கள் வளர்ந்துவரும் இரண்டு ஊர்களின் உறவுகளிலும் ஊனத்தை விளைவிக்கும் ஆபத்துக் கொண்டவை என்பதை எல்லோராலும் ஊகிக்க முடிகிறது.

மதிப்புக்குரிய எழுத்தாசிரியரே பேசித் தீர்க்க வேண்டிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஓர் அற்பமான உள்வீட்டு விவகாரம் – ஊடக தர்மங்களைத் தாண்டி உங்களால் எழுதப்பட்டுள்ளதனால் ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி’ என்று சர்ச்சையொன்று வெளியே வந்து வெடித்திருக்கிறது.

போதாதற்கு அக்கரைப்பற்று அரசியலையும் உள்வாங்கி இருக்கிறீர்கள். மதிப்புக்குரிய வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் அவர்களுக்கும், தேசிய காங்கிரசின் உயர்பீடத்துக்கும் இடையே உள்ள உறவு அண்மைக்காலத்தில் வலுவாக இருந்திருக்கிறது. அதனால்தான் ஆதார வைத்தியசாலையினுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஷகீ யினுடைய சங்கமம் நிச்சயிக்கப்பட்டு அழகுபடுத்தபட்டிருந்தது.

மாத்திரமல்லாமல் கொவிட் 19 னுடைய இறுக்கமான நேரங்களிலெல்லாம் அவர்கள் இருவருமாக இணைந்து தேசிய காங்கிரசின் தலைமையின் ஆலோசனைகளுக்கு அமைவாக சுகாதார மேம்பாட்டு நலத்திட்டங்களை செய்து முடித்து வெற்றியும் கண்டார்கள்.

மாத்திரமல்ல, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிருடைய ஆளுமைமிக்க நகர்வுகளில், தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களுடைய ஒத்தணங்களும்,ஒத்தாசைகளும் என்றும் இருந்தமைக்கு வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் அவர்களே சாட்சியாவர்.

இவற்றுக்கான அத்தாட்சிகளில் ஒருவனாய் என்னுடைய வகிபாகம் இன்றி அமையாததனால் என்னுடைய பதிலளிக்கும் பொறுப்பு எனக்குள் முக்கியத்துவம் பெறுகிறது.

மதிப்புக்குரிய ஆசிரியரே தயவுசெய்து எந்தக் காரணங்களுக்காகவும் அட்டாளைச்சேனையையும் அக்கரைப்பற்றையும் இவ்வாறான பதிவுகள்மூலம் பரம்பரை பகையாளிகளாக்கி எமக்கு இடையிலுள்ள இதயசுத்தியான உறவுப் பாலத்தை உடைத்தெறிந்து விடாதீர்கள்.

சீனச் சுவராகயிருக்கும் எமக்கிடையிலுள்ள சீமந்தம் (உடைந்துபோகா உறவு) என்றும் நீடிக்கும். அதனுடைய நிரந்தரத்திற்கு நீங்களும் நானும் என்றும் பிரார்த்திப்போம்’ எனவும் தவிசாளர் றாஸிக் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் குறிப்பு:

மேற்படி விவகாரம் தொடர்பில் நாம் அக்கரைப்பற்று எனும் ஊரை ஒட்டுமொத்தமாக பிரதேச வாதம் கொண்டது எனக் குறிப்பிடவில்லை. அவ்வாறு குறிப்பிடுவது நேர்மையும் ஆகாது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் விடயத்தில் அக்கரைப்பற்றிலுள்ள பிரதேசவாதம் கொண்டோர் இழைத்து வரும் சூழ்ச்சிகள், மோசமான நடவடிக்கைகைள் தொடர்பிலேயே எழுதியுள்ளோம். நீங்கள் பிரார்த்திப்பது போல், இரண்டு ஊர்களும் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பமுமாகும்.

தொடர்பான கட்டுரை: அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்