05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

🕔 June 3, 2021

– அஹமட் –

கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல பண்பாக இருக்கும் நிலையில், அரசு வழங்கும் பணத்தை பயனாளிக்கு வழங்குவதை எவ்வாறு அரச அதிகாரிகள் படமெடுக்க அனுமதிக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கொவிட் நிலைமை காரணமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 05 ஆயிரம் ரூபா பணம், பிரதேச செயலகங்கள் ஊடாக நேற்று புதன்கிழமை தொடக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சில பிரதேச செயலாளர்களும், பிரதேச செயலக அதிகாரிகளும் பொதுமக்களுக்கு குறித்த 05 ஆயிரம் ரூபா பணத்தை வழங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வருகின்றன.

இது நாகரீகமற்றதும், மோசமானதுமான நடவடிக்கை என – சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விடயத்தில் சக மனிதர்களின் மரியாதைக்கும் கௌரவத்துக்கும் மதிப்பளிக்குமாறு, பிரதேச செயலாளர்களையும் பிரதேச செயலக அதிகாரிகளையும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்