தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

🕔 June 3, 2021

– பைஷல் இஸ்மாயில் –

கொவிட் தொற்றுடனான போரில் முன்னரங்கில் பணியாற்றும் தாதியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் முற்றலில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கொவிட் -19 தொற்றுக்கு முதலில் பலியாவது தாதியரா?, கொவிட் உடனான போரில் முன்னரங்கில் நிற்போருக்கு போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்கு, நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்துக்கும் தடுப்பூசி வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றி மேற்கொள்ள போக்குவரத்து வசதி செய்து கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று என, இதன்போது பல்வேறு கோஷங்களை அவர் எழுப்பினர்.

சுமார் 5,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படவில்லை என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இதன் போது தெரிவித்ததோடு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதிகளில் சேவையாற்றும் பணிக் குழுவினருக்கு உணவு வினியோகத்தை ஒழுங்கு செய்யுமாறும், ஆபத்துக்கு முகங்கொடுக்கும் சுகாதாரப் பணிக் குழுவினரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்