பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு

🕔 May 5, 2021

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரசாங்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில், விமல் வீரவங்ச மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, டிரான் அலெஸ், அதுரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பிற கட்சிகள் அழைக்கப்பட்டிருந்ததால் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு அமைச்சர் விமல் வீரவங்ச முடிவு செய்திருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அழைக்கப்பட்டதால், மேற்படி கூட்டுக் கட்சித் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கட்சித் தலைவர்கள் நேற்று மாலை 5.00 மணியளவில் அலரி மாளிகைக்கு சென்று கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பிரதமருக்கு அறிவித்ததாக அந்த செய்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 11ம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும் என்று பிரதமர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்