ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து

🕔 May 5, 2021

ந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆகும். அதில் 1,254 பேர் காயமரடைந்தனர்.

இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபர அறிக்கையின் படி, இந்த வருடம் அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் அதிகமானவை (768) மேல் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வடமேல் மாகாணம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் எண்ணிக்கை 238 ஆகும்.

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 வீதமானவை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே இந்த விபத்துக்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த புள்ளி விபரத்துக்கு அமைவாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக, வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் இடம்பெற்ற நாளாக திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

இதேவேளை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு விடயமாகும்.

Comments