சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர்

🕔 September 2, 2020

– எம்.எம். ஜபீர் –

ம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராக மீண்டும் ஏ.எம்.எம். நௌஷாட் இன்று புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்காக முன்னாள் தவிசாளர்  ஏ.எம்.எம். நௌஷாட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

இதனடிப்படையில்நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் 07 வாக்கினைப் பெற்றுக்கொண்டார். பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட் 13 வாக்கினைப் பெற்றார்.

இதற்கிணங்க தவிசாளராக ஏ.எம்.எம். நௌஷாட் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த மாஹிர், இம்முறை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஐந்து உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  ஏழு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக பதின்மூன்று உறுப்பினர்கள், நொஷாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாட், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி, சம்மாந்துறை  பிரதேச சபை செயலாளர் எம்.ஏ. கே. முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை  பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தவிசாளராகப் பதவி வகித்த ஏ.எம்.எம். நௌஷாட் தனது தவிசாளர் பதவியை கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி ராஜினாமாச் செய்தார்.

பொதுத் தேர்தல் காலத்தில் நொஷாட் – மக்கள் காங்கிரஸுக்கு எதிராகவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தமையினால், இவரை மக்கள் காங்கிரஸ் – கட்சியிலிருந்து இடைநிறுத்தியது.

இந்தப் பின்னணியில் நேற்றைய தினம் சம்மாந்துறைக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் விஜயம் செய்து, நொஷாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்