சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு

🕔 June 16, 2020

– எம்.எம். ஜபீர் –

ம்மாந்துறை தொகுதியில் தனிநபரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாகவும், மக்களை பற்றிய எந்த விடயமும் அந்தக் கட்சி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாவிதன்வெளி 06ஆம் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற முக்கியஸர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

சம்மாந்துறை தொகுதியில் தனிநபரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாகவும், மக்களை பற்றிய எந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும், அந்தவகையில் பார்க்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மக்கள் காங்கிரஸுக்கு முதல் தடைவயாக அம்பாரை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 33,000ஆயிரம் வாக்குகளை வழங்கிய மக்களை கௌரவபடுத்த வேண்டும் என்பதற்காகவும், அந்த மக்களுக்கு பிரநித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காகவும் அதிகபட்சமாக வாக்களித்த சம்மாந்துறை தொகுதிக்கு அந்தக் கட்சி தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரநித்துவத்தை வழங்கியது.

கடந்த பொதுத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிகமாக வாக்களித்த நிலையில், சம்மாந்துறை தொகுதிற்கு இரண்டு தடைவை நாடாளுமன்ற பிரநித்துவம் இல்லாமல் தவித்த போது, குறைந்தது ஒரு வருடத்துக்காவது தேசிய பட்டியல் நாடாளுமன்ற பிரநித்துவத்தினை அந்தக் கட்சியின் தலைமைத்துவம் வழங்கவில்லை.

ஆனால் சில பிரதேசங்களுக்கு அந்தக் கட்சி இரண்டு பிரநித்துவங்களை வழங்கியது.

ஆனால் அந்த ஊர்களை குறை கூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. மு.கா. தலைமையத்தான் நாம் குறைகூற வேண்டும். மூன்று பிரதேச சபையினை பிரநித்துவப்படுத்தும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட சம்மாந்துறை தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொடுக்காமல் ஏனைய தொகுதிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக இந்த கட்சிக்கே வாக்களித்தால் இவ்வாறான  செயற்பாடுகளுக்கு எந்த விதமான மாற்றத்தினையும் காணமுடியாது.

இந்த தேர்தலில் புதிய மாற்றத்தினை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

எனக்கு  நல்ல சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த பின்தங்கிய பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு வாக்களியுங்கள். இம்மாற்றத்தினை உருவாக்க உங்கள் ஒவ்வெருவருக்கும் முடியும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு 33 ஆயிரமாக இருந்த வாக்குகள், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 41 ஆயிரமாக வளர்ச்சியடைந்துள்ளது.

சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்டபிரதச சபைகளையும்,  30க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் கொண்டுள்ளது. 

எனவே எதிர்வரும் தேர்தலில் நடாராளுமன்ற பிரநித்துவத்தை பெற்று சகல பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும்  இனங்கன்டு நிறைவேற்றும் கட்சியாக மக்கள் காங்கிரஸ் திகழும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்