ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’
மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
சம்பத் அபேகோன், சம்பத் விஜேரட்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் தற்போது வசித்து வரும் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து, இலங்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு சர்வதேச பொலிஸார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ள கோரிக்கையில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதா என இலங்கை சட்ட மாஅதிபர், சிங்கப்பூர் சட்ட மாஅதிபரிடம் கோரியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் அவ்வாறான மாற்றங்களை தற்போதைக்கு ஏற்படுத்துவதற்கான தேவை கிடையாது என சிங்கப்பூர் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளதாக மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஏதேனும் மாற்றம் இருந்தால் எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்திற்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஊழல் – பின்னணி
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த காலப் பகுதியில் முறிகள் விநியோகத்தின் போது பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
அர்ஜுன் மகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் ஊடாகவே இந்த ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலேயே இந்த ஊழல் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து விடயங்களை ஆராய்ந்திருந்தார்.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மத்திய வங்கி முறிகள் விநியோகத்தின் ஊடாக 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஊழலில் ஊடாக அரசாங்கத்திற்கு 8,529 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரனை கைது செய்யும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கை வரலாற்றில் பாரிய ஊழல் மோசடி செய்த குற்றச்சாட்டில் தேப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் வாழ்ந்து வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தனது பெயரை மாற்றி ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.