உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

🕔 June 13, 2020

– அபு ஸய்னப் –

ஜேர்மன் நாட்டின்  கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate Championship) இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது.

இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள்.

இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண கிறிக்கட் வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியாகும்.

குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் ஷாலெம் சுமந்திரன் ( Shalem Sumanthiran) பெற்று தேசத்திற்கு மகுடம் சூட்டியுள்ளார்.

இவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் உலகளாவிய ரீதியில் 08ஆம் நிலையை, றோயல் கல்லூரியின் மாணவன் ஜானுல் டி சில்வா பெற்று இம்மகுடத்துக்கு வலுச் சேர்த்துள்ளார்.

இந்த நிகழ்வு நமக்கும் தேச நல்லிணக்கத்துக்கும் ஏராளமான செய்திகளை முன்மொழிகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் – சிறுபான்மை இனத்தில் உதித்த தேசத்தை நேசிக்கும் நல்ல பிரஜை ஆவார். அவரும் றோயல் கல்லூரியின் பழைய மாணவர். பௌதீகவியலில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் சட்டத்தைக் கற்றுக் கொண்டவர். இவர் இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இலங்கை நாட்டை குழறுபடிக்குட்படுத்த முனைபவர் என்ற குற்றச்சாட்டு சுமந்திரன் மீது வேண்டுமென்றே பல தடவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் தவறான எந்த அடிப்படையுமற்ற விமர்சனமுமாகும்.  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் – சட்ட ஆட்சியை நிறுவுவதில் எப்போதும் முன் நின்று பாடுபடுபவர்.

நாட்டை நேசிக்கும் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதில் முன் நின்று உழைக்க வேண்டும். அதைத்தான் சுமந்திரன் செய்கிறார். அவரது நேர்மையான அணுகுமுறைக்கு தவறான வியாக்கியானமும் விமர்சனமும் வழங்கப்படுவது அவர் சிறுபான்மை உரிமைக்காக பாடுபடுபவர் என்பதனாலா என்கிற கேள்விகளும் உள்ளன.

எது எப்படி இருப்பினும், அவருடைய மகன் உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்திருப்பது இலங்கை நாட்டிற்கேயாகும். ஏனைய சட்ட வல்லுநர்களைப் போல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சட்டத்துறைக்கான பங்களிப்பின் மூலமும் நாட்டின் சட்டவாட்சியில் ஏற்படும் மேம்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நற்பெயரையே ஏற்படுத்தும்.

முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அடிப்படை மனித உரிமைகள் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இலவசமாக உதவ முன் வந்திருப்பதும் அவரின் இன மத பேதமற்ற மனித மாண்புக்கு சான்றாகும்.

ஆக, சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள, தேசப்பற்றுள்ள, கற்ற சிறந்த ஆளுமையாவார். அவரை இன, மத பேதங்களற்ற நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும். 

Comments