கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி

🕔 June 14, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பயணித்த டிபென்டர் வாகனம் விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

பின்னணி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் போலித் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை (09ஆம் திகதி) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

தேசிய மருத்துவமனையின் பண்டாரநாயக்க கட்டடத்தில் உள்ள பண வைப்பு பெட்டக பகுதிக்கு பிரவேசித்த குறித்த வைத்தியர், மருத்துவமனையின் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு, வேதனம் என்பவற்றுக்காக செலுத்தப்படவிருந்த பணத்தினை இவ்வாறு கொள்ளையிட்டு சென்றார்.

பின்னர் முச்சக்கரவண்டியொன்றில் அவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் கடமையிலிருந்த புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும், பொலிஸ் அதிகாரி ஒருவரும் குறித்த கொள்ளையனை துரத்திப் பிடித்தனர்.

இதன்போது அந்த வழியால் வந்த மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த என்பவரும், குறித்த கொள்ளையனைத் துரத்திப் பிடிக்க உதவினார்.

கைதான வைத்தியர் ஹொரணை பகுதியை சேர்ந்தவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்