வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த

🕔 June 1, 2020

டக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதனைக் கைவிடவேண்டும் என்று நீங்கள் அண்மையில் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இப்போதும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் தமிழ்த் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்” என பிரதமர் மஹிந்தவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தனி நாட்டுக்காகத்தான் ஜனநாயக வழியிலும் பின்னர் ஆயுத ரீதியாகவும் தமிழர்கள் போராடினார்கள். விடுதலைப் புலிகள் இதற்கு ‘தமிழீழம்’ என்று பெயர் சூட்டினார்கள். இது தனிநாட்டுக்கு அவர்கள் சூட்டிய பெயர்.

விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோருகின்றது. அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்புக்காகத்தான் சமஷ்டியைக் கோருகின்றார்கள். கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையும் தனி நாட்டுக்குரியதுதான்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதே தனிநாடுதான். இந்தக் கோரிக்கையிலிருந்து விடுபட வருமாறுதான் நாம் கூட்டமைப்பைக் கோருகின்றோம்.

கூட்டமைப்பு வெறுமனே தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று வாயால் சொல்வதில் அர்த்தமில்லை. அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்புக் கோரிக்கையை இன்னமும் கைவிடவில்லை. பின்னர் எவ்வாறு தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை என்று சொல்ல முடியும்.

சமஷ்டித் தீர்வுதான் வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். அதனைக் கைவிட்டு வருமாறே நாம் சொல்கின்றோம்.

புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் பேசுவோம் என்று கூட்டமைப்பை அண்மையில் சந்தித்தபோது உறுதியளித்துள்ளேன். எனவே, புதிய அரசாங்கத்தில், எல்லோரும் இலங்கை மக்கள் என்ற அடிப்படையிலேயே தீர்வை வழங்குவோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்த்து தீர்வை வழங்கமாட்டோம்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்