தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்

🕔 April 14, 2020

ரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோர், அந்த நபர்களை தோப்புக்கரணம் போடவைத்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் விமர்சனங்களை வெளியிட்டமையினை அடுத்து, குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேவேளை “மேற்படி பொலிஸார் இருவரும் நோவினை செய்யும் நோக்கத்துடன், அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.

“நீதிமன்றம் மட்டுமே மக்களை தண்டிக்க முடியும். பொலிஸார் தண்டிக்க முடியாது” எனவும் அஜித் ரோஹன இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்பான செய்தி: ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்: பறிபோனது வேலை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்