06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு

🕔 April 5, 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 06ஆம் திகதி, காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பின்னர் நாளைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைக்கு வரும்.

இதேவேளை நாளை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையான வேலை நாட்கள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு ‘வீட்டிலிருந்து பணிபுரியும்’ வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முந்திய வாரமும் ‘வீட்டிலிருந்து பணிபுரியும்’ வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று பரவலைக் கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் – தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும்.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது அவற்றிலிருந்து வெளியேறுவதோ – மறு அறிவித்தல் வரை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்