மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம்

🕔 April 1, 2020

– அஹமட் –

க்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளையில் பெற்றுக் கொண்ட மேலதிகப் பற்று (OD), கடன் ஆகியவற்றை செலுத்துமாறும், வங்கியின் பெயரில் எழுதப்பட்டுள்ள காலோசலைகளுக்கு உடனடியாகப் பணத்தை வைப்பிடுலிடுமாறும் கூறி, தமக்கு அந்த வங்கியின் முகாமையாளர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருவதாக வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்திலும், வாடிக்கையாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மேற்படி வங்கி முகாமையாளர், வங்கியில் பெற்ற மேலதிகப் பற்றுக்கான பணத்தை உடனடியாகச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வங்கிக் கடன்கள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடுவதைப் பிற்போடுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் இவ்வாறு நடந்து கொள்வதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் நேற்றைய தினம் மேற்படி முகாமையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘புதிது’ செய்தித்தளம் பேசிய போது; வாடிக்கையாளர்களிடம் தான் பேசியதை மேற்படி முகாமையாளர் ஒப்புக்கொண்டார்.

ஆயினும், மேலதிகப்பற்று, வங்கிக்கு எழுதிய காசோலை ஆகியவற்றுக்கு பணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தாம் தண்டம் விதிக்கப் போவதில்லை என்று, மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் இதன்போது கூறினார்.

இதேவேளை, இந்தப் பிரதேசத்திலுள்ள ஏனைய வங்கிக் கிளைகள், தமது வாடிக்கையாளர்களுடன் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்வதாகவும், வங்கி மேலதிகப் பற்றுக்கான பணத்தினை செலுத்துவதற்கான கால எல்லையினை நீடித்து வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

நாட்டில் கொரோனா தாக்கம் காரணமாக வர்த்தக நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்ட நிலையில், தமது பணக் கொடுப்பனவுகளை வங்கிகளுக்குச் செலுத்த முடியாத நிலையில் அநேகமாக வர்த்தகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், வங்கிகளுக்கு இவ்வாறான பணக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான காலை எல்லையினை நீடித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளை முகாமையாளர் நடந்து கொள்வதாக, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்