பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்

🕔 March 20, 2020
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மரக்கறி கடையொன்றில் மக்கள் கூட்டம்….

– முன்ஸிப் அஹமட், படங்கள்: ரி.எம். இம்தியாஸ் –

நாடு முழுவதும் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதால், பொதுமக்கள் – தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முண்டியடித்து வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மரக்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் என, அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இன்று மாலை அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 06.00 மணிக்கே நீக்கப்படும் என்பதால், மக்கள் வழமையை விடவும் அதிகளவு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பச்சை மிளகாய், தேங்காய் உள்ளிட்ட சமையல் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மக்களை வீடுகளில் இருக்கச் செய்வதற்காக ஊடரங்குச் சட்டம் அமுல் செய்யப்படும் நிலையில், மக்கள் இவ்வாறு முண்டியடித்து, கூட்டமாக பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக அக்கறையுடையோர் கவலை தெரிவிக்கின்றனர்.

பெருமளவான மக்கள் இவ்வாறான சனக்கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்லும் போது, முகக் கவசம் அணியாமல் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

இது குறித்து பொதுமக்கள் ஒவ்வொருவரும் அக்கறையெடுத்துக் கொள்தல் அவசியமாகும்.

இல்லாது விட்டால், அரசாங்கம் எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அர்த்தமற்றதாகி விடும்.

அட்டாளைச்சேனையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம்…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்