நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

🕔 March 20, 2020

ந்தியா – டெல்லியைச் சேர்ந்த நிர்பயா எனும் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்கிலிடப்பட்ட அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

இன்று காலை 5.30 மணிக்கு திகார் சிறையில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்திச் சேபை தெரிவித்தது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இவர்களின் கருணை மனுக்களையும் இந்திய குடியரசுத்தலைவர் நிராகரித்திருந்தார்.

தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகு இது குறித்து பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி; ”கடைசியாக அவர்கள் தூக்கிலடப்பட்டனர். இன்றுதான் எங்களுக்கு நீதி கிடைத்தது. இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்குk;, அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி இது” என்று கூறினார்.

07 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?

2012-ம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

2012 டிசம்பர் 17ஆம் திகதியன்று முக்கிய குற்றவாளியான பேருந்து சாரதி ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நடந்தவை என்ன?

2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.

2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து சாரதியுமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி மன்றம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

Comments