கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்

🕔 January 22, 2020

– யூ.எல். மப்றூக் –

“இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போதைய ‘மைனாரிட்டி’ அரசாங்கத்தைக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையினைப் பெறுவார்களாயின், அதன் பின்னர் சிறுபான்மை சமூகங்களுக்கு, அவர்களால் முடிந்த அத்தனை அநியாயங்களையும் செய்வார்கள் என்றும் அவர் இதன்போது அச்சம் தெரிவித்தார்.

அந்த நேர்காணலின் போது ரிசாட் பதியுதீனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் வழங்கிய பதில்களும் வருமாறு;

கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்.

தற்போதைய அரசாங்கமானது ஒரு ‘மைனாரிட்டி’ (சிறுபான்மை) அரசாங்கமாகும். அவ்வாறானதொரு நிலையில் இருந்து கொண்டுதான் இப்படியான அகம்பாவமான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

இந்த ஆட்சியாளர்களிடம் சென்று மண்டியிட்டு, அவர்களுடன் கூட்டுச் சேர வேண்டிய எந்தவிதமான தேவைகளும் எமக்குக் கிடையாது.

கேள்வி: கோட்டாபாய ராஜபக்ஷ – உங்களை தனது அரசாங்கத்தில் இணையுமாறு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அழைத்தால், செல்வீர்களா?

பதில்: சிறுபான்மை கட்சிகள் இந்த நாட்டை ஆளப் போவதில்லை. எங்களுக்கு மக்கள் தந்துள்ள அரசியல் பலத்தை இந்த நாட்டின் நலனுக்காக, அபிவிருத்திக்காக, நல்லாட்சிக்காக கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். பல ஆட்சியாளர்களுடன் நாம் பணியாற்றியுள்ளோம். யுத்த காலத்திலும் மக்களை மீள்குடியேற்றிய காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில்தான் இருந்தோம்.

எதிர்காலத்தில் பிரதமராக சஜித் வருவாரா? மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவாரா? என்பது, சிறுபான்மையினரின் வாக்குப் பலத்தில்தான் தங்கியுள்ளது.

எவ்வாறாயினும், ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பொன்று வருகின்ற போதுதான் அதுபற்றிய தீர்மானத்தை எம்மால் எடுக்க முடியும்.

கேள்வி: அடுத்த நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கான சண்டை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு விடுமோ என, அந்தக் கட்சியினரே அச்சப்படுகின்ற காலகட்டத்தில், சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க முடியும் என்று, எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

பதில்: தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களில் அதிகமானோர் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாங்கள் வெற்றிபெறுவதற்காக கடுமையாக உழைப்பார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக வடக்கு, கிழக்கில் அவருக்கு ஆதரவு வழங்கிய சிறுபான்மைக் கட்சிகள் உழைத்ததைப் போன்று, தென் பகுதியில் அவரின் வெற்றிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால், பொதுத் தேர்தல் என்பது தற்போதுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அடுத்த நாடாளுமன்றத்துக்கும் தாங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக முயற்சிக்கும் தேர்தலாகும்.

எனவேதான் அடுத்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு எதிராக 119 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்கிறேன். விகிதாசார தேர்தல் முறைமை அந்த வெற்றியைப் பெற்றுத் தரும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, எமது கூட்டணியின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தாது.

கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றிபெற முடியாமல் போனமைக்கு அல்லது அதிகபட்ச வாக்குகளால் தோல்வியடைந்தமைக்குக் காரணம், அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடந்த சதி நடவடிக்கைகள்தான் என்று, சஜித் தரப்பினரில் கணிசமானோர் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உட்கட்சி சதி நடந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீண்ட காலம் இழுத்தடித்து விட்டு, சஜித் பிரேமதாஸவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியதை தவறாகப் பார்க்கிறேன்.

அதேபோன்று, சஜித் பிரேமதாஸவுக்காக அவரின் கட்சி சார்ந்த சிலர் வேலை செய்யாமல் சாக்குப் போக்காக இருந்து விட்டனர்.

மேலும், கடந்த அரசாங்கத்துக்கு எதிராக தேர்தல் காலத்தில் கோட்டாபய தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறிப்பாக மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து அவர்கள் அதிகம் பேசினார்கள். இந்த நாட்டை அமெரிக்காவுக்கு ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுக்கப் போகின்றார்கள் என்றனர். மேற்கத்திய நாடுகளின் அடிமைகளாக சிங்கள மக்களை ஆட்சியாளர்கள் ஆக்கப் போகின்றனர் என்றார்கள். சிங்கள மக்களின் இருப்புக்கு பாதிப்பு வந்து விட்டது – சஹ்ரான் போன்ற கொலைதாரிகளின் குண்டுவெடிப்புகள் நிறைய நடக்கவுள்ளன என்றார்கள். சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தமிழ் – முஸ்லிம் மக்களின் கைகள் ஓங்கி விடும் என்று சிங்கள மக்களை அச்சப்படுத்தினார்கள்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களெல்லாம் பொய் என நிரூபிக்கக் கூடிய சக்தி, சஜித் பிரேமதாஸவின் கூட்டணியினருக்கு இருக்கவில்லை.

தேர்தல் பிரசாரக் காலம் குறுகியதாக இருந்தமையினாலும், சஜித் பிரேமதாஸ அணியினருக்கு சார்பாக ஊடகங்கள் செயற்படாமையினாலும் மக்களிடம் சஜித் தரப்பினரின் கருத்துக்கள் போய் சேரவில்லை.

கேள்வி: முஸ்லிம் அரசியல் தலைவர்களில் உங்கள் மீது மட்டும், சிங்கள அரசியல்வாதிகள் அதிமான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாகச் சுமத்தி வருகின்றமைக்கு என்னதான் காரணம்?

பதில்: ராஜபக்ஷ அணியுடன் இணைந்து நீண்டகாலம் அரசியல் பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு – மஹிந்த அரசாங்கம் தண்டனை பெற்றுக்கொடுக்காத காரணத்தினாலும், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குரியதாக்கும் சதி நடவடிக்கைகளை மேற்கொண்ட சில மதகுருமார்களின் அசிங்கமான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தமையினாலும், அவ்வாறானவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினாலும்தான், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து நாம் வெளியேறி, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினோம்.

அவ்வாறு நாங்கள் மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதிலிருந்து என்மீது அவர்கள் அபாண்டம் சுமத்தத் தொடங்கினார்கள்.

அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தபோது, அதற்கு ஆதரவு வழங்குமாறு என்னிடம் கேட்டார்கள். நாம் ஆதரவு வழங்கவில்லை. அன்றிலிருந்து என்னை பௌத்த மக்களின் மிக மோசதான விரோதியாக காட்ட முற்படுகின்றனர். அதற்குச் சாதகமாக சிங்கள ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இவைதான் காரணமே தவிர, நான் எவ்வித பிழைகளையும் செய்யவில்லை. என்றோ ஒருநாள் நான் நிரபராதி என்பது சிங்கள மக்களுக்குத் தெரியவரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக என்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதன் மூலம், எமது கட்சியை அழித்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். ஆனால், அது நடக்காது. மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆகக்குறைந்தது எமது கட்சி 10 ஆசனங்களை வென்றெடுக்கும்.

கேள்வி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கடந்த வாரமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு உங்களிடம் மிக நீண்ட நேர வாக்கு மூலமொன்றைப் பெற்றுக்கொண்டதல்லவா, அது ஏன்?

பதில்: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்த சில மதகுருமார்களும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்களும்தான் ஏப்ரல் குண்டுவெடிப்புடன் எனக்கு தொடர்புள்ளதாக அபாண்டங்களைச் சுமத்தினார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு, மூன்று பொலிஸ் குழுக்களை கடந்த அரசாங்கம் நியமித்திருந்தது. 30 பேருக்கும் அதிகமானோர் எனக்கு எதிராக 300க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் ரிசாட் பதியுதீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, அறிக்கையொன்றினை சபாநாயகருக்கு தற்போதுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் அனுப்பியிருந்தார்.

ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் என்னைச் சம்பந்தப்படுத்தும் அசிங்கமான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அந்த அடிப்படையில் இதுவரை இரண்டு தடவை சி.ஐ.டி.யினர் (குற்றப் புலனாய்வு திணைக்களம்) என்னை விசாரித்துள்ளனர். மூன்றாவது முறையாக என்னிடம் இன்னுமொரு சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிகிறேன். இவை அனைத்தும் அபத்தமான நடவடிக்கைகளாகும்.

என்மீது சந்தேகம் உள்ளது போன்று காட்டி, மீண்டும் மீண்டும் என்னை விசாரணை செய்வதன் மூலம், என்னை எங்காவது பழிவாங்கலாமா என்று பார்க்கின்றனர்.

ஆனால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. நான் நிரபராதி. எனவே எத்தனைமுறை என்னை விசாரித்தாலும் என்னைக் குற்றம் காண முடியாது.

கேள்வி: கோட்டாபய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் வழங்கப்படாமை குறித்து, உங்கள் கருத்து என்ன?

பதில்: தமது பொதுஜன பெரமுன கட்சியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை என்றும், அதனாலேயே அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியவில்லை என்றும் ராஜபக்ஷ தரப்பு கூறியுள்ளது.

மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களாக நியமிப்பதற்கு சிலரின் பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்தக் கட்சியிடம் தாம் கேட்டதாகவும், அதன் பொருட்டு அவர்கள் வழங்கிய பெயர்களில் முஸ்லிம்கள் எவரும் உள்ளடங்கியிருக்கவில்லை என்றும் ராஜபக்ஷவினர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவையில் முஸ்லிம்கள் நியமிக்கப்படாமைக்கு அவர்கள் கூறும் காரணம் இவைதான். இது குறித்து நாம் எதுவும் கூற முடியாது.

கேள்வி: கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால், மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை போன்று மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படும் என்று, ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் நீங்கள் கூறி வந்தீர்கள். அந்தக் கூற்று தொடர்பில் உங்களிடம் ஏதாவது திருத்தங்கள் உள்ளனவா?

பதில்: இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு வரும் என்றும், மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும் என்றும் கூறினேன். அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கென இருக்கும் சட்டங்களை இல்லாமலாக்கி, எல்லோருக்கும் பொதுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை அவர்களின் அணியிலுள்ள அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கிறார்.

இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்ளையும் இல்லாதொழிக்க இப்போது முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்.

அதேபோன்றுதான், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு மாவட்டத்தில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை அணி பெற வேண்டிய வாக்குளின் வெட்டுப் புள்ளியை 05 வீதத்திலிருந்து 12.5 வீதமாக மாற்றுவதற்கான பிரேரணையொன்றினை, அவர்களின் அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்திருக்கிறார்.

மேலும், சிறுபான்மையினத்தவர்களின் அரசியல் கட்சிகள் ஆபத்தானவை என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

இவையெல்லாம் இந்த நாட்டுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்று எமக்குத் தோன்றவில்லை.

இந்த நிலையில், அவர்கள் குறித்து எமக்கு ஏற்பட்ட அச்சம், எம்மை விட்டும் விலகவில்லை.

‘மைனாரிட்டி’ அரசாங்கத்தை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் நடக்கின்றவர்கள், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலே மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெறுவார்களாயின், சிறுபான்மை சமூகங்களுக்கு அவர்களால் முடிந்த அத்தனை அநியாயங்களையும் செய்வார்கள்.

கேள்வி: கடந்த ஆட்சியில் ஜனாதிபதி – ஒரு கட்சி சார்ந்தவராகவும், பிரதமர் இன்னொரு கட்சி சார்ந்தவராகவும் இருந்தமை காரணமாக, அரசாங்கத்தைக் கொண்டு செல்வதில் பாரிய இழுபறிகள் ஏற்பட்டதோடு, அரசாங்கத்தைப் புரட்டிப்போடுமளவு அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டன. நீங்கள் விரும்புவது போல், சஜித் பிரேமதாஸ அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், அதே இழுபறி வராதா?

பதில்: நிச்சயமாக அப்படியொரு நிலைமை வராது. மைத்திரிபால சிறிசேன, அவசர அவசரமாக ஜனாதிபதியாகக் கொண்டு வரப்பட்டவர். அவர் ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை. அவர் அரசியலமைப்பை மீறியவர். இந்த நாட்டின் சாதாரண பிரஜையொருவரே அரசியலமைப்பை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், நாட்டின் ஜனாதிபதியாக இருந்து கொண்டு, மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிருந்த அதிகாரத்தில் அரசியலமைப்பை மீறி பல தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கை வைத்தார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்திலும் கை வைத்தார். அவருடைய அறியாமையினால்தான் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டார். அவ்வாறான ஒருவரை ஜனாதிபதியாக் கொண்டு வந்தமை – மக்கள் செய்த தவறாகும்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ படித்தவர், ராணுவத்தில் சேவையாற்றியவர், ஒழுக்கத்துடன் செயற்படுகின்றவர். எனவே, அவர் ஒருபோதும் அரசியலமைப்பை மீறிச் செயற்பட மாட்டார் என்கிற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, அரசியலமைப்பை மீறி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படாவிட்டால், வேறொரு தரப்பு அரசாங்கம் அமைத்தாலும் பிரச்சினைகள் எழாது. ஜனாதிபதியும் அரசாங்கமும் வெவ்வேறு தரப்பினராக இருந்தாலும், அவர்கள் தத்தமது வரையறைகளுக்குள் நின்று செயற்படும் போது, அந்த ஆட்சிதான் நல்லாட்சியாக அமையும்.

கேள்வி: நீங்கள் அமைச்சராக இருந்த கடந்த ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. திகன கலவரம், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அவற்றில் முக்கியமானவையாகும். ஆனாலும், அதே தரப்பினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ஏன் விரும்புகிறீர்கள்?

பதில்: முஸ்லிம்களுக்கு எதிராக அந்தச் சம்பவங்கள் நடந்தது உண்மைதான். ஆனால், அந்த சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். நாடு என்றிருக்கும் போது, அதில் நடக்கும் தவறுகளைப் புரிந்தவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தினது கடமையாகும். அதை கடந்த அரசாங்கம் செய்தது.

அனைத்துக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டனர்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது – முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அளுத்கம சம்வம், தம்புள்ள சம்பவம், கிறேன்ட்பாஸ் சம்பவம் உள்ளிட்ட எந்தவொரு சம்பவத்துடன் தொடர்புடையவர்களும் அடையாளம் காணப்பட்டு – நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர். முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டியோர் தூண்டிக் கொண்டேயிருந்தனர். வன்முறைகளைப் புரிந்தோர் அவற்றினைச் செய்து கொண்டேயிருந்தனர். ஆனால், அவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த எமது அரசாங்க காலத்தில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

கேள்வி: கோட்டாபய ராஜபக்ஷவின் சில நடவடிக்கைகளை, உங்கள் நாடாளுமன்ற உரையொன்றில் பாராட்டியிருந்தீர்கள். அப்படியென்றால், கோட்டாவின் ஆட்சி உங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளதா?

பதில்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் நல்ல பல விடயங்களைக் கூறியிருந்தார். அவ்வாறான விடயங்களை அவர் நடைமுறைப்படுத்தும் போது, அவற்றினை நாம் பாராட்டுகிறோம். அதே போன்று தவறுகள் செய்தால், அவற்றுக்கெதிராகவும் குரல்கொடுப்போம்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்