பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

🕔 December 15, 2019

– அஹமட்-

ம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை அமைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய 60ஆயிரம் ரூபா பணத்தை, பயனாளி ஒருவரிடமிருந்து வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்தப் பணத்தை சுமார் இரண்டரை மாதங்கள் மோசடியாக தன்வசம் வைத்திருந்து விட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நிதிப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் உதவித் திட்டப் பணிப்பாளரின் இந்த மோசடி குறித்து – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் அறிந்து கொண்டதுடன், ‘புதிது’ செய்தித்தளமும் இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தது.

மேலும், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், இந்த மோசடி குறித்து லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இவற்றினால் அச்சமடைந்துள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம், தான் செய்துள்ள குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் தற்போது பொய்யானதும், மோசடியானதுமான ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடியான காரியத்துக்கு அவரின் திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்களும் துணை போயுள்ளமை அம்பலமாகியுள்ளது.

உதாரணமாக, பயனாளரிடமிருந்து வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்ட பணத்தை, இரண்டரை மாதங்கள் வரை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்த அஸ்லம், அதனை கடந்த வெள்ளிக்கிழமை (13ஆம் திகதி), பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கிணங்க நிதிப் பிரிவில் ஒப்படைத்த பின்னர்; ‘பணப் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றினை தற்காலிகமாக ஸ்தாபித்தல்’ எனும் தலைப்பில் ஒரு மோசடியான ஆவணத்தை தயாரித்துள்ளார்.

அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விடயத்தின் சுருக்கம் இதுதான்;

‘ஏ.ஆர். இஸ்மாயில் எனும் பயனாளியிடமிருந்து 10ஆம் மாதம் 02ஆம் திகதியும், 10ஆம் மாதம் 04ஆம் திகதியும் மொத்தமாக 60 ஆயிரம் ரூபா பணம் அறவீடு செய்யப்பட்டது. அந்தப் பணத்தை 10ஆம் மாதம் 07ஆம் திகதி பணம் கட்டும் பத்திரத்துடன் நிதிப் பிரிவுக்கு கையளித்த போதும் அதனை அரச கணக்கில் வைப்பிலிடுவதற்கு நிதிப் பிரிவு முன்வரவில்லை. அதனால், அந்தப் பணத்தை நிதிப் பிரிவு கையேற்கும் வரை, பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை தற்காலிகமாகத் தோற்றுவித்து, அதில் அந்தப் பணத்தை வைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் பராமரிப்பிலுள்ள கோவைப் பெட்டகமே, மேற்படி 60 ஆயிரம் ரூபா பணத்தையும் வைப்பதற்குரிய பாதுகாப்பான பெட்டகமாகும். அதில்தான் பணம் வைக்கப்பட்டது’.

இவ்வாறு உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் தயாரித்துள்ள மோசடியான ஆவணத்தில், அவரின் கீழ் பணியாற்றும் சில நபர்கள் கையொப்பமிட்டு, மோசடிக்குத் துணை போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்திருக்கும் மேற்படி ஆவணம் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரச பணத்தை மோசடியாக இரண்டரை மாதங்கள் வைத்திருந்த குற்றத்துக்கு மேலதிகமா,க மோசடியான ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டுக்கும் தற்போது உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் ஆளாகியுள்ளார்.

இது தவிர, இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் தயாரித்து வைத்துள்ள மேலும் சில மோசடி ஆவணங்களின் பிரதிகளும் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவை இவ்வாறிருக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் மோசடியாக தயாரித்துள்ள ஆவணத்தில் கூறப்பட்டது போன்று, அரச பணத்தை இரண்டரை மாதங்கள் வரை பெட்டகம் ஒன்றைத் தயாரித்து பாதுகாப்பாக வைக்கலாமா? அவ்வாறு செய்வதற்கு பிரதேச செயலகம் ஒன்றின் திட்டமிடல் பிரிவுக்கு அதிகாரம் உள்ளதா? பிரதேச செயலகம் ஒன்றில் பணப் பெட்டகம் ஒன்றினை எவ்வாறான சந்தர்ப்பங்களில் உருவாக்கலாம்? அவ்வாறு உருவாக்குவதற்கு யாருக்கெல்லாம் அனுமதி உள்ளது? என்பவை உள்ளிட்ட விடயங்களையும், அரச நிதிப் பிரமாணம் இவை குறித்து என்ன கூறுகிறது என்பதையும் தெரிந்து கொள்வதற்கு நாளை வரை காத்திருங்கள்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி?

Comments