அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி?

🕔 December 14, 2019
அஸ்லம்

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு ஊழல்களும் மோசடிகளும், லஞ்சம் பெறும் நடவடிக்கைளும் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பல்வேறு புகார்களும், முறைப்பாடுகளும் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவர் மேற்கொண்ட பண மோசடியொன்று அம்பலமாகியதை அடுத்து, அது தொடர்பாக லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை முறையிடப்பட்டுள்ளது.

ஊழல், மோசடிகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் மோசடிகளின் பட்டியல் நீளமானவை.

  • பிரதேச செயலகத்தின் ஊடாக அரச நிதியின் மூலம் செய்யப்படும் கட்டட மற்றும் வீதி நிர்மாண வேலைகளை நிறைவேற்றும் கொந்தராத்துக்காரர்களிடமிருந்து லஞ்சமாக பெருந்தொகை பணம் பெறுதல்,
  • அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியின் மூலம் ஏழை மக்களுக்கு வாழ்வாதார பொருட்களையும் விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்களையும் வழங்கும் போது, அவற்றினைக் கொள்வனவு செய்யும் கடைகளில் பெருந்தொகை கொமிசன் பெறுதல்,
  • கட்டடங்கள் வீதிகளை உரிய முறையில் நிர்மாணிக்காத கொந்தராத்துக்காரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவை உரியபடி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்துக்கு அறிவித்தல்,
  • கம்பெரலிய வேலைத் திட்டம் குறித்து தெரியப்படுத்தும் விளம்பரப் பதாதைகளை தயாரிப்பதற்கான செலவை விடவும் பல மடங்கு அதிகமான பணத்தை கொந்தராத்துக்காரர்களிடமிருந்தும், பயனாளிகளிடமிருந்தும் வற்புறுத்திப் பெறுதல்,
  • கொந்தராத்துக்காரரர்களின் வேலைக்கான கொடுப்பனவுப் பணத்தை வழங்குவதற்காக லஞ்சம் பெறுதல், லஞ்சம் கொடுக்க மறுக்கும் கொந்தராத்துக்காரர்களுக்கான பணக் கொடுப்பனவை வழங்காமல் இழுத்தடித்தல்,

இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளன.

கிடைத்த தகவல்கள்

இந்த அதிகாரிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அவ்வப்போது ஊடகவியலாளர்களிடம் கூறினாலும், அவற்றினை தங்கள் பெயரில் பகிரங்கப்படுத்துவதற்கோ, அவற்றுக்கான ஆதாரங்களை வழங்குவதற்கோ அவர்கள் பின்னடித்தே வந்தனர்.

இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெறும் இவ்வாறன சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை திரட்டுவதிலும், அவற்றுக்கான ஆதாரங்களை பெற்றுக் கொள்வதிலும் மிக நீண்ட காலமாக ‘புதிது’ செய்தித்தளம் அர்ப்பணத்துடன் செயற்பட்டு வந்தது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தற்போதைய செயலாளர் ஜே. லியாகத் அலி, அங்கு கடமையேற்ற பின்னர், அந்தப் பிரதேச செயலகம் லஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளின் கூடாரமாக மாறிப்போய் விட்டதாக பெரும்பாலானோர் குறைபட்டுக் கொள்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாராக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம், கணக்காளராகக் கடமையாற்றும் ஏ.எல்.எம். றிபாஸ் ஆகியோர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்வதில் மிக மோசமான நபர்களாகப் பெயரெடுத்தனர்.

எனவே, அங்கு நடக்கும் மோசடிகள் தொடர்பில் ‘புதிது’ செய்தித்தளம் புலனாய்வு செய்யத் தொடங்கியபோது, மேலும் பல தகவல்களும் ஆதாரங்களும் சிக்கத் தொடங்கின.

முறைகேடுகளுக்கு துணைபோகும் பிரதேச செயலாளர்

இதன்போது பிரதேச செயலாளர் தொடர்பிலும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார்கள் கிடைத்தன.

உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் மற்றும் கணக்காளர் றிபாஸ் ஆகியோர் சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சிக்கிக் கொண்டதாகவும், அவர்களைக் காப்பாற்றி விடும் செயற்பாடுகளில் பிரதேச செயலாளர் லியாக்கத் அலி பல்வேறு தடவை ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்தார் என்றும் புகார்கள் உள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் மேற்கொண்டுவரும் இவ்வாறான மோசடிகள் தொடர்பாகவும், அதேபோன்று கணக்காளர் றிபாஸ் மேற்கொண்ட மோசடிகள் குறித்தும் ‘புதிது’ செய்தித்தளம் பல்வேறு தடவை செய்திகளை வெளியிட்டுள்ளதோடு, அவை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரிகளுக்கும் விடயங்களைத் தெரியப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உதவித் திட்ட பணிப்பாளரின் பண மோசடி

இவ்வாறான பின்னணியில்தான் கம்பெரலிய திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கான கூரைகளை அமைக்க 01 லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டதாகவும், இத்திட்டத்தை அமுல்படுத்திய அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர் இதில் பல்வேறு மோசடிகளைப் புரிந்துள்ளார் என்பது குறித்தும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிட்டின.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் வழங்கிய நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில், வீட்டுக் கூரைகளை அமைப்பதற்கான 01 லட்சம் ரூபாவும் பல கட்டங்களாக வழங்கப்பட்டன.

இதற்கமைய வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்ட பின்னர், அந்தத் திட்டம் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பதாகை (போர்ட்) ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும் எனக் கூறி, அதற்காக ஒவ்வொரு பயனாளியிடமிருந்தும் தலா 02 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அவ்வாறான பதாகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றோ, அவற்றுக்குப் பணம் அறவிடப்பட வேண்டும் என்றோ, அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு இதனைச் செய்துள்ளது.

இந்த விடயம் குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையிடுவதற்காக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுடன் ‘புதிது’ செய்தித்தளத்தினரும் இணைந்து அம்பாறை கச்சேரிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது, இத்திட்டத்தில் இடம்பெற்ற இன்னுமொரு மோசடி பற்றிய தகவலொன்று தொலைபேசி மூலம் கிடைக்கப் பெறுகிறது.

அது – மேற்படி கூரை அமைக்கும் நடவடிக்கைக்காக அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வசிக்கும் ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா நிதியை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர் வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்டார் என்றும், கடந்த ஒக்டோபர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் அவர் மொத்தமாகப் பெற்றுக் கொண்ட 60 ஆயிரம் ரூபா பணத்தையும் எமக்குத் தகவல் கிடைத்த தினம் வரை (டிசம்பர் 09ஆம் திகதி) பிரதேச செயலகத்தின் நிதிப் பிரிவில் ஒப்படைக்காமல், சட்ட விரோதமாக தன்வசம் வைத்துள்ளார் என்றும் அறியக் கிடைத்தது.

சிக்கியது எப்படி?

இந்தத் தகவலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் அன்றைய தினம் நேரடியாக நாம் தெரியப்படுத்தினோம்.

இதனையடுத்து, கூரை அமைப்பதற்கு பணம் வழங்கப்பட்ட பயனாளி மற்றும் அந்தப் பணத்தை அஸ்லம் என்பவரிடம் ஒப்படைத்த பயனாளியின் மனைவி ஆகியோரைச் சந்தித்த ‘புதிது’ செய்தித்தளக் குழுவினர், அவர்களிடம் வீடியோ வடிவில் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டு, அதனை மறுநாள் 10ஆம் திகதி செய்தியாகவும் வெளியிட்டது.

இதேவேளை, தம்மிடம் இருந்து உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் 60 ஆயிரம் ரூபா பணம் பெற்றுக் கொண்டதை, சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் குறித்த பயனாளரும் அவரின் மனைவியும் சத்தியக் கடதாசி ஒன்றின் மூலமும் 10ஆம் திகதியன்று உறுதிப்படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் இது தொடர்பில் புதன்கிழமை 11ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை, உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் என்பவருக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழங்கினார்.

‘கம்பெரலிய திட்டத்தின் மூலம் வீட்டுக்கூரை அமைக்க வழங்கப்பட்ட பணம் தொடர்பிலான விளக்கம் கோரல்’ எனும் தலைப்பில் அந்தக் கடிதம் அமைந்திருந்தது.

அந்தக் கடிதத்தில்; ‘தங்களால் திட்டமிடல் பிரிவின் மூலம் மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக அட்டாளைச்சேனை – 03ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் கபுர் முகம்மது இஸ்மாயில் எனும் பயனாளிக்கு காசோலை மூலம் வழங்கப்பட்ட பணம் மீண்டும் ரொக்கமாக மீளப்பெறப்பட்டதாகவும் இப்பணத்திற்கு இதுவரை என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் நிறுவனத் தலைவராகிய எனக்கு இதுவரை எதுவித அறிவித்தலும் தங்களது பிரிவினால் வழங்கப்படாத நிலையில், மேற்படி விடயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரால் தொலைபேசி மூலம் பணிக்கப்பட்டதற்கு அமைவாகவும், மேலும் அரசாங்க அதிபரின் விசேட வேண்டுகோளின் பேரில் இன்று 2019.12.11ஆம் திகதி அலுவலகத்துக்கு வருகை தந்த பிரதம கணக்காளரால் வழங்கப்பட்ட அறிவுரைக்கு அமைவாகவும், மேலும் இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனையைத் தளமாகக் கொண்ட ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையிலும் ஆரம்ப கட்ட அறிக்கையொன்றை நிதிப்பிரமாண, தாபனக்கோவை ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அரசாங்க அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டியிருப்பதனால், இதற்கான விளக்கம் ஒன்றைச் சமர்ப்பிப்பதோடு அவ்வாறான பணம் தங்களது பிரிவின் பொறுப்பில் இருப்பின், குறிப்பிட்ட பணத்தை அரச கணக்குக்கு நிதிப்பிரமாண அடிப்படையில் உடனடியாக மீள வைப்பிலிடுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என, பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

மோசடியை ஒப்புக் கொண்டமை

இதனையடுத்து, தனது களவுபிடிபட்டு விட்டதனாலும், இந்த விடயத்திலிருந்து தப்பிக்க முடியாது என்கிற தீர்மானத்துக்கு வந்த படியினாலும், சுமார் இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்த 60 ஆயிரம் ரூபா பணத்தையும், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் நேற்று முன்தினம் 12ஆம் திகதி வியாழக்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயகலத்தின் கணக்காளரிடம் முறையாக ஒப்படைத்தார்.

அதன் பிறகுதான் இந்த மோசடியிலிருந்து தன்னைக் காப்பாறிக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக போலி ஆவணங்களைத் தயாராிக்கத் தொடங்கினார் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம்.

அவை என்ன என்கிற தகவல்களும், மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகளும் நாளை வெளியாகும்.

தொடர்பான செய்திகள்:

01) கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

02) அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பிரதேச செயலாளர் வழங்கிய கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்