அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு

🕔 November 7, 2019

– அஹமட் –

னாதிபதி வேட்டாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, அட்டாளைச்சேனையில் இன்று வியாழக்கிழமை இரவு தேசிய காங்கிரஸ் நடத்திய பிரசாரக் கூட்டத்தின் மீது, சிலர் கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி, கல் வீசித் தாக்குதல்களையும் நடத்தியதால், அங்கு சிறிது நேரம் பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது.

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஎல்லா குறித்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு சிலர் கூச்சலிட்டதோடு, கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனால், அங்கு பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது.

ஆயினும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எவ்வாறாயினும், இதன்போது அங்கிருந்த அதாஉல்லா தரப்பினரின் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இது குறித்து அதாஉல்லா தரப்பினர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் பேசுகையில்; முன்னாள் மாகாண அமைச்சரும் தேசிய காங்கிரஸிருந்து விலகி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டவருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் உறவினர்களும், அவருக்கு நெருக்கமானவர்களுமே இந்த காடைத்தனத்தை தலைமை தாங்கி நடத்தியதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், “ஜனநாயக ரீதியாக எமக்கு விரும்பிய கட்சியை ஆதரித்து, எமது கருத்துக்களை மேடையமைத்து வெளியிடும் போது, இவ்வாறு காடைத்தனமாக இடைஞ்சல்களை ஏற்படுத்தியமையானது அருவருப்பான செயலாகும்” என்றும், அதாஉல்லா தரப்பினர் தெரிவித்தனர்.

மேற்படி கூட்டத்தில் இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது உரையை முழுமையாக நிறைவு செய்து விட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்