ராஜபக்ஷ அரசாங்கத்தில் அனுபவித்து விட்டு, இப்போது மு.கா. தலைவர் குற்றம் கூறுவதை ஏற்க முடியாது: ஹசன் அலி
ராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ராஜபக்ஸக்கள் மீது கை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
“ராஜபக்ஸக்கள் அவர்களுடைய கடந்த கால ஆட்சியில் நாட்டை காப்பாற்றவே இல்லை என்றும், அவர்களின் குடும்பத்தையும், அவர்களின் அரசாங்கத்தையுமே காப்பாற்றினார்கள் எனவும் மு.கா. தலைவர் கூறியதாக பத்திரிகையில் வெளியான செய்தியை பார்த்தேன்.
அன்று அந்த ராஜபக்ஸ ஆட்சியில் அமைச்சராக இருந்து விட்டு, இன்று இப்படி பேச முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. வேண்டுமென்றால் இவர்கள் அன்று அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மக்கள் முன்னிலைக்கு வந்திருந்தால் இவர்களின் கதைகளை இன்று ஜீரணித்தாவது கொள்ள முடிந்திருக்கும்
ரணிலை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை காப்பாற்ற இவர்கள் நடத்திய தொடர்ச்சியான குறுகிய சுய லாப செயற்பாடுகளை எமது மக்கள் மிக நன்றாகவே அறிவார்கள். பிரதமர் ரணிலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட தருணத்தில் அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று காட்டுவதற்காக உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டத்தை ரணில் கையில் எடுத்தார்.
ரணிலின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக மாத்திரம் எமது மக்களை மறந்தவர்களாக இவர்கள் நாடாளுமன்றத்தில் கைகளை உயர்த்தினார்கள், அந்த தேர்தல் திருத்த சட்டம் இவர்களின் ஒத்தாசையுடன் நிறைவேற்றப்பட்டதால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறி போய் விட்டன.
உதாரணமாக நாவிதன்வெளி பிரதேசம் முழுமையாக உகன பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டு விட்டது. அதே போல உகனவில் இருந்து வந்த பெரும்நில பிரதேசம் ஒன்று அம்பாறையுடன் சேர்க்கப்பட்டு விட்டது. பின்னர் இவர்கள் உள்ளூராட்சி சபைகளின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள் மீது எல்லை நிர்ணயம் நடத்த வேண்டி உள்ளது என்கிற பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாகவும் கைகளை உயர்த்தினார்கள். இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதால்தான் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட நேர்ந்தது.
உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மண் கவ்வியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றி ஈட்டியது.
மாகாண சபை தேர்தலை நடத்தினால் வீட்டுக்குத்தான் ஓட வேண்டி வர வேண்டும் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாகவே அதை நடத்தாமல் தந்திரம் செய்திருக்கின்றனர் என்பது வெளிப்படை ஆகும்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக மாத்திரமே கோர்ட் அணிந்து கொண்டு நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எத்தனையோ சட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களின் நிலம், இருப்பு, பாதுகாப்பு, உரிமை ஆகியன சம்பந்தப்பட்டவை. எமது முஸ்லிம் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் நீதிமன்றங்களில் ஆஜராகவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.