நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு

🕔 November 8, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் இந்த வழக்கு மனுவை பரிசீலித்தனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி, முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த சம்பவம் தொடர்பில், கலகொட அத்தே, ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் தலைமை பரிசோதகர் ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவின் அடிப்படையில், இன்று ஞானசார தேரர் உட்பட்ட பிரதிவாதிகள் மூவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், அன்றையதினம் மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்