அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு

🕔 October 7, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளுக்காக, அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்களிடமிருந்து 04 வீதம் எனும் அடிப்படையில் லஞ்சம் – பணமாகப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

உதாரணமாக, 10 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்த வேலையொன்று வழங்கப்படும் போது, அதனைப் பெறும் ஒப்பந்தகாரரரிடமிருந்து 40 ஆயிரம் ரூபா (04 வீதம்) லஞ்சமாகப் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில், அண்மையில் சில செய்திகளை ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டதை அடுத்து, எம்மைத் தொடர்பு கொண்ட சில ஒப்பந்தகாரர்கள் இந்தத் தகவலை வழங்கினர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள மூன்று முக்கிய அதிகாரிகளுக்கு இந்த லஞ்சம் சென்றடைவதாகவும் தகவலளித்தோர் தெரிவித்தனர்.

பெற்றுக் கொள்ளும் லஞ்சப் பணத்தில் ஒரு அதிகாரிக்கு இரண்டு வீதமும், ஏனைய இரண்டு அதிகாரிகளுக்கு தலா ஒரு வீதம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ள போதும், இது தொடர்பில் அவர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களைத் திரட்டி செய்திகளை வெளியிட்டு வருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளைப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தகாரர்கள், அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் தவறினால், அவர்களின் வேலைகளுக்கான கொடுப்பனவை வழங்காமல் குறித்த அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும், ஒப்பந்த வேலைகளில் இல்லாத பிழைகளை இருப்பதாகக் கூறி வஞ்சம் தீர்ப்பதாகவும், பாதிக்கப்பட்ட ஒப்பந்தகாரர்கள் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் தொடர்பிலேயே, இவ்வகையான குற்றச்சாட்டுகள் அதிகளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்