அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்: கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

🕔 March 29, 2019

– மரைக்கார் –

ரசியல் விசித்திரமானது, நாம் எண்ணிப்பார்க்காத பல ஆச்சரியங்களை நமது கண்முன்னே அது நிகழ்த்திக் கொண்டிருப்பதை தினமும் காண்கின்றோம். உச்சத்தில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு – வேடிக்கை பார்ப்பதில் அரசியலுக்கு அதுவே நிகரானது. அதுபோலவே, அடி மட்டத்தில் இருந்தவர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று, அரசியல் ஆச்சரியப்படுத்தும்.

உதாரணத்துக்கு தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவையும், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரையும் எடுத்துக் கொள்ளலாம்.

அதாஉல்லா, சுமார் 15 வருடங்கள் அமைச்சராக அரசியலில் கொடி கட்டிப் பறந்தவர், அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர். அப்போது, அவருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தராக – பணியாற்றியவர்தான் ஏ.எல்.எம். நசீர். அந்தக் காலகட்டத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆக நசீர்  இருந்தார்.

இப்போது நிலைமை அப்படியே தலை கீழாக மாறி விட்டது. அதாஉல்லாவுக்கு எந்தவித அரசியல் அதிகாரங்களும் இல்லை. கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோற்றுப் போனார். ஆனால், அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த ஏ.எல்.ஏம். நசீர், இப்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார்.

அரசியல் விசித்திரங்களுக்கு மேலே சொன்னது ஓர் உதாரணம்தான். ஆனால், நாம் சொல்ல வந்த விடயம் இதுவல்ல. கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த ஹாபிஸ் நசீர் அஹமட் பற்றியே இங்கு பேச வந்தோம்.

முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்தார். மாகாண சபை கலைக்கப்பட்டதும், அரசியல் அதிகாரத்தை இழந்தார்.

அரசியல் ஊடாக கிடைக்கும் அதிகார போதையை, அவ்வளவு எளிதில் கைவிட முடியாது. எனவே அரசியல் பதவிகள் எதையாவது எடுப்பதற்கு ஹாபிஸ் நசீர் முயற்சி செய்தார். ஆனால், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அதற்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லை. ஏறாவூரைச் சேர்ந்த ஹாபிஸ் நசீரை அரசியலில் வெட்டி வீழ்த்தி விட்டு, அதே ஊரைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானாவை வளர்த்து விடுவதுதான் மு.கா. தலைவரின் தற்போதைய நிகழ்ச்சி நிரலாகும்.

ஹக்கீமுடைய இந்த எண்ணத்தை ஹாபிஸ் நசீரும் அறிவார்.

எனவே, ஹக்கீமை தாண்டி அரசியல் அதிகாரம் ஒன்றை பெற நினைத்த ஹாபிஸ் நசீர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக – அவரின் அமைச்சின் கீழ் இருந்த தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவியை அண்மையில் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீனினின் கீழ், அண்மையில் – இரண்டு அமைச்சுக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழிருந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுக்களே றிசாட் பதியுதீனுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டன.

இதிலுள்ள அரசியல் சுவாரசியம் என்னவென்றால், றிசாட் பதியுதீனுக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட அமைச்சின் கீழ்தான், ஹாபிஸ் நசீர் தலைவராக இருக்கும் – தொழில் பயிற்சி அதிகார சபை உள்ளது.

இதன் காரணமாக, றிசாட் பதியுதீனுக்குக் கீழ் – பணி புரிய வேண்டிய நிலைமை ஹாபிஸ் நசீருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த நிலைமையை றிசாட் பதியுதீன் – எதிர்ப்பு அரசியல் மனநிலையுடன் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட அமைச்சுக்களுக்கான கடமைகளை அண்மையில் பொறுப்பேற்ற தினத்தில், அங்கு வந்திருந்த ஹாபிஸ் நசீருடன், அமைச்சர் றிசாட் பதியுதீன் மிகவும் நட்புடனேயே பேசினார். அதனால், ஹாபிஸ் நசீரும் நெருக்கமானார்.

இது குறித்து அரசியலில் பரவலாகப் பேசப்படுகிறது.

றிசாட் பதியுதீனுக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையிலான இந்த நெருக்கமானது, கட்சி அரசியலிலும் எதிர்பாராத சில திருப்பங்களை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தொடர்பான செய்தி: தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்