முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 September 27, 2015

Hakeem - 012.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும்,  அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமைகளையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். மு.கா. தலைவர் ஹக்கீம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஐ.நா மனிதஉரிமைஆணைக்குழுவின் 30ஆவது செயலமர்வின் போது, இலங்கைதொடர்பில் இம்மாதம் 24ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது.

இலங்கைஅரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இணக்கப் பிரேரணை, கடந்த தசாப்பதங்களில் சகல சமூகங்களையும் சேர்ந்த, இலங்கை பிரஜைகள் அனுபவித்த துயரங்களை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய திருப்பு முனையென, இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.

நிறுவன ரீதியான சட்டச் சீர்திருத்தங்களினூடாக நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு உரமூட்டுவதற்கும் இது வழிவகுப்பதாக அமையும்.

இலங்கையில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் என்பனவற்றை அடையப் பெறுவதற்கு, எல்லா பிரஜைகளுக்கும் நீதியும், சமத்துவமும், சமாதானமும் அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்பொழுதும் இருந்து வருகின்றது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும்,  அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமைகளையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது

இந்த பிரேரணையும்,தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டமையும், எல்லா சமூகங்களையும் சேர்ந்த பாதிப்புக்குள்ளானவர்களின் கோரிக்கைகளையும் முழுமையாக அணுகுவதற்கு ஓர் அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளதோடு, மூல காரணிகளை கண்டறிந்து அவற்றை உரிய முறையில் கையாளுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளது.

குறிப்பாக, இந்தப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, நிறுவக ரீதியான பொறிமுறைகள் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும், எல்லா சமூகத்தின் நம்பிக்கைக்கு உரியனவாகவும் அமையுமானால், அவை உண்மையான நல்லிணக்கத்துக்கும், சிறந்த சமூக அமைப்புக்கும் பெரிதும் உதவும்.

இவற்றோடு தொடர்புடைய பங்காளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோர், வேறுபாடுகளை புறந்தள்ளி இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் முழுமையான செயல்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில், அத்தகைய முக்கியமான நடைமுறைக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கையில் ‘இலங்கை தமிழ் மக்கள் தமது
சொந்த சமூகத்தின் தவறுகளை சுயபரிசோதனை செய்வதற்கும் மற்றும் சரியான கலாசார சூழ்நிலை என்பவற்றில் கண்ணியமாகவும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் இந்தத் தருணத்தைபயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ என்றவாறு குறிப்பிட்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த அறிக்கையின் முக்கிய மூலாதாரமானது, இலங்கையின் எல்லாச் சமூகங்களுக்கும், பிரஜைகளுக்கும் பொருந்துவதாகஅமைகின்றது.

எங்களது சமூகத்தை நீதிக்கும், சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் இட்டுச் செல்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் தயங்காது.

தேசியப் பிரச்சினைக்கு, பேச்சுவார்த்தை மூலமானஅரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை அர்ப்பணிப்புடன் உறுதியாக வலியுறுத்திவரும் கட்சியென்றவகையில், அரசியல் அதிகாரத்தைப் பகிர்வதில் அரசாங்கம் மீதுள்ள கடப்பாட்டை அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக அரசாங்கம் எல்லா சமூகத்தினருக்கும் திருப்திஅளிக்கக்கூடிய வகையில் அவசரமாக முன்னெடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்புகின்றது.

பன்முகத் தன்மை பொதிந்த நாடென்ற வகையில், சமாதானம் நிலவுவதற்கு ஏற்ற வகையில், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வாய்த்திருந்த வரலாற்று வாய்ப்பை, முன்னைய அரசாங்கம் புறக்கணித்து, தவறிழைத்து விட்டது.

நல்லிணக்க நடைமுறையும், அரசியல் தீர்வும் இரண்டறக் கலந்தவையென, நாம் உறுதியாக நம்புகின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்