ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி
உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில் காணப்படுகின்ன. இதனால், இப் பாலத்தினூடாகப் பயணிப்போர் இரவு வேளைகளில் கடுமையான சிரமங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
அறுகம்பே பிரதேசத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், லட்சக் கணக்கான உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், பொத்துவில் பிரதேசத்தையும் அறுகம்பே பகுதியையும் இணைக்கும் தரை வழிப் பாதையாக அமைந்துள்ள அறுகம்பே பாலத்திலுள்ள விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக எரியாமலுள்ளமை குறித்து பொத்துவில் பிரதேச சபையினர் கவனம் செலுத்தாமல் உள்ளமை தொடர்பில், அப் பகுதி மக்கள் தமது அதிருப்திகளை வெளியிடுகின்றனர்.
இரவு வேளையில், பாலமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றமையானது, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. மேலும், இருள் சூழ்ந்த இந்தப் பகுதி வழியாகப் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் நிலைவரமும் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதேவேளை, இப் பாலத்திலுள்ள சில மின் கம்பங்களில், விளக்குகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகுறித்து, பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எம்.சி. ஹபிபுர் ரஹ்மானிடம் வினவியபோது; குறித்த சபைக்கு சில மாதங்களுக்கு முன்னராகவே தான் இடமாற்றம் பெற்று வந்ததாகவும், அறுகம்பே பாலத்திலுள்ள விளக்குகள் எரியாமை தொடர்பில் தனக்கு எதுவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
உலகின் முக்கியமான சுற்றுலாத் தளமான அறுகம்பேயில் அமைந்துள்ள பாலத்தின் மின் விளக்குகள், இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக எரியாமலுள்ள நிலையில், அதுகுறித்து – தனக்கு எதுவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என, மேற்படி பிரதேச சபை செயலாளர் தெரிவித்தமையினை, குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கான முயற்சியாகவே காண முடிகிறது.