சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

🕔 September 20, 2018

– முன்ஸிப் அஹமட் –

தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது.

இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

தேசிய காங்கிரசின் வளர்ச்சிக்காகவும் அதன் சட்ட விவகாரங்கள் தொடர்பிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த சட்டத்தரணி பஹீஜ், அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கான வேட்பாளராக, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கான மறைமுக உறுதியினை சட்டத்தரணி பஹீஜுக்கு கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா வழங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆயினும், அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலுக்குரிய வேட்புமனு சமர்ப்பிப்பதற்குரிய  இறுதி நேரத்தில், அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தப்பத்தினை பஹீஜுக்கு அதாஉல்லா வழங்காமல் சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டொன்றும் உள்ளது.

இவ்வாறான பல்வேறு குழிபறிப்புகள், குத்து வெட்டுகளுக்கு பிறகும் கட்சியுடன் இணைந்து செயலாற்றி வந்த நிலையிலேயே, தற்போது உதுமாலெப்பையின் ராஜிநாமாவினை அடுத்து, தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து விலகுவதற்கு, சட்டத்தரணி பஹீஜ் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்