புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை

🕔 August 2, 2018

 – புதிது ஆசிரியர் பீடம் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிகரட் மற்றும் பீடி போன்ற புகைத்தல் பொருட்களின் விற்பனையினை நிறுத்துவதற்கு, சில அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அண்மையில் முயற்சிகளை மேற்கொண்ட போதும், கணிசமான வியாபார நிலையங்களில் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமையைக் காணக் கூடியதாகவே உள்ளது.

குறிப்பாக ஹோட்டல்களில் சிகரட் வியாபாரம் எதிர்பார்க்கப்பட்ட வகையில் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு மற்றும் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட முக்கிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த போதும், புகைத்தல் பொருட்களின் விற்பனையினை ஏன் நிறுத்த முடியவில்லை என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

இன்னொருபுறமாக, இந்த விடயத்தில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகம் ‘சீரியஸாக’ தலையிடவில்லை என்றும், புகைத்தல் பொருட்களை ஊரில் விற்பனை செய்வதை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகளில், பெரிய பள்ளிவாசல் முழுமையான பங்களிப்பினைச் செய்யவில்லை என்கிற பேச்சுக்களும் பரந்தளவில் உள்ளன.

நேற்றைய தினம் சிகரட்டுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விலையில் சிகரட் ஒன்று 55 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், புகைத்தல் பொருட்களின் விற்பனையினை  அட்டாளைச்சேனையில் நிறுத்துவதற்குரிய அழுத்தமான நடவடிக்கைகள், இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதேவேளை, அட்டாளைச்சேனையில் கஞ்சா பாவனை அதிகரித்திருக்கிறது என்கிற கசப்பான உண்மையினை இங்கு பதிவு செய்தல் அவசியமாகிறது. அண்மையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தச் செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்து ஊரின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதை விடவும், இவ்வாறான போதைப் பழக்கத்தை ஊரிலிருந்து ஒழித்துக் கட்டுவது பற்றி நாம் அவசரமாகச் சிந்திக்க வேண்டும்.

அதற்காக, அனைத்துத் தரப்புக்களும் இணைந்து, இன்னுமின்றும் இறுக்கமாகக் கைகோர்க்க வேண்டும்.

இது – அட்டாளைச்சேனைக்கு மட்டுமான செய்தியல்ல என்பதையும் கவனத்திற் கொள்ளுதல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்