தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு

🕔 May 24, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று புதன்கிழமை ராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறுகையில்;

“கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 3,000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டேன். இந்த நிலையில் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்திலேயே எம் பி பதவியை இழந்தேன்.

எனினும் தேர்தல் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் வாக்களித்தமைக்கு அமையவும் புத்தளம் மண்ணைக் கௌரவிக்கும் வகையிலும் புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இழக்கப்பட்டு வந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்யும் வகையிலும் கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை எனக்கு வழங்கினார்.

அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் இறைவனுக்கும், கட்சியின் தலைமைக்கும், கட்சியின் உயர்பீடத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒன்றரை வருட காலத்திற்கே எனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக நான் சுமார் இரண்டரை வருட காலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க இறைவன் அருள் புரிந்துள்ளான்.

கடந்த பொதுத் தேர்தலில் எமது கட்சி, சொற்ப வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வேறு சில மாவட்டங்களிலும் இழந்திருந்தது. அம்மாவட்டங்களுக்கு பிரதிநித்துவத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும், தலைமைக்கு மதிப்பளித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது இந்தப் பதவிக்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் புத்தளம் மாவட்டத்துக்கு அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன பணிகளை செய்துள்ளேன் என்பதில் மனத்திருப்திக் கொள்கின்றேன்.

எம்.பி. பதவியை காலத்தின் தேவை கருதி நான் ராஜினாமாச் செய்துள்ள போதிலும் தொடர்ந்தும் கட்சியின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உழைப்பேன் அத்துடன் எங்கள் கட்சித்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் உறுதியளிக்கின்றேன்” என்றார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்