அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

🕔 March 28, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது.

18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 08 உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ்  06 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜனபெரமுன கட்சி ஓர் உறுப்பினரைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், மு.காங்கிரசுக்கு எதிரான தரப்புக்கள் அனைத்தும் இணையும் போது அட்டாளைச்சேனையில் கூட்டாட்சியொன்றினை அமைக்கும் சாத்தியமும் உள்ளது.

இதனடிப்படையில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுடன், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.ரி. ஹசனலி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டபைப்பின் பங்காளிக் கட்சியான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் பல தடவை பேச்சுவார்த்தை நடத்திய போதும், அவை வெற்றியளிக்கவில்லை.

கூட்டாட்சி அமைக்கும் போது தவிசாளர் பதவியை யார் முதலில் பெற்றுக் கொள்வது என்பதில் உடன்பாடு காணப்படாமையினாலேயே, இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்தன எனத் தெரியவருகிறது.

மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவாகியுள்ள சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுக்கு தவிசாளர் பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தை வழங்குமாறும், மீதியாகவுள்ள 03 வருடங்களுக்கு தேசிய காங்கிரசைச் சேர்ந்தவரை தவிசாளராக நியமிக்குமாறும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

மக்கள் காங்கிரஸ் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டதரணி அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இரு தடவை தவிசாளராக பதவி வகித்தவராவார். எனவே, அவரைக் கௌரவிக்கும் வகையில், இம்முறை அவருக்கு ஆரம்பத்திலேயே தவிசாளர் பதவியை வழங்க வேண்டும் என, பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறான இழுபறி நிலையில், நேற்றைய தினமும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவுடன் ஹசனலி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால், அதுவும் வெற்றிபெறவில்லை.

எனவே, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஒருவரே, தவிசாளர் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன.

எவ்வாறாயினும், தவிசாளர் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக – இறுதி நேரத்தில், தேசிய காங்கிரசுக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான மக்கள் காங்கிரசுக்கும் இடையில், கூட்டாட்சி அமைப்பது தொடர்பில் உடன்பாடுகள் எட்டப்படுமாயின், அட்டாளைச்சேனை பிரதேச சபையிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும்.

ஏற்கனவே, சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளில் மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments