சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம்

🕔 December 31, 2017
ட்டமாவடி – மீரோவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி வித்தியாலயத்தின் மைதான எல்லைப் பிரச்சினை காரணமாக, இரு சமூகங்களிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

சக்தி வித்தியாலயத்தை அண்டிய 08 முஸ்லிம் குடும்பங்களின் காணிகளைச் சேர்த்து அடாத்தாக மைதானத்துக்கு சுற்றுமதில் அமைத்து வருவதால், அங்கு தமிழ் – முஸ்லிம் மக்களிடையே முறுகல்நிலை தோன்றியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பாடசாலை சார்பாக விடயங்களை கேட்டறிந்து கொண்டார். இதன்பின்னர், சட்டரீதியில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

இப்பிரச்சினை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; கல்குடா பிரதேசத்தில் மாஞ்சோலை – பதுரியா எல்லை வீதியானது கோரைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்குரியதா அல்லது கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபைக்குரியதா என்று நீண்டகாலமாக இழுபறி நிலவிவந்தது.

மீரோவோடை பிரதேசத்தில்  சக்தி வித்தியாலயம் எனும் பாடசாலை அமைந்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இப்பாடசாலையை அண்டிய பகுதியில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், பாடசாலை மைதானத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அயலிலுள்ள 08 முஸ்லிம்களின் குடியிருப்பு காணிகளும் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினையால் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே முறுகல்நிலை தோன்றியுள்ளது.

இக்காணிப் பிரச்சினை தொடர்பாக கடந்த ஜூலை 18ஆம் திகதியும் மற்றும் ஓகஸ்ட் 15ஆம் திகதியும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் பாரியளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கலவரங்களும் மூண்டன.

இதன்பின்னர், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குறித்த காணிகள் முஸ்லிம் குடும்பங்களின் குடியிருப்பு காணி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலை நிர்வாகம் முஸ்லிம்களின் குடிப்பு காணிகளை மீண்டும் அடாத்தாகப் பிடித்து சுற்றுமதில் அமைத்துள்ளது.

இந்நிலையில், இன்று அப்பிரதேசத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்களை ஒன்றுதிரட்டி சட்டரீதியான தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இப்பிரச்சினையால் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்படுவதை எந்தவித்திலும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments