சாதாரண நாளில் காணும் நிலவை விடவும், 14 மடங்கு பெரிய நிலவை இன்று திங்கட்கிழமை அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களில் காணும் நிலவை விடவும், 30 வீதம் அதிக பிரகாசம் நிறைந்ததாகக் காண்பபடும் என்று, அந்தப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.
மேலும், பூமிக்கு அருகில் இன்று நிலவு காணப்படும் எனவும் அவர் கூறினார்.
சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு பூமியை நோக்கி நெருங்கிவரும் நிலவானது, பூமியிலிருந்து இன்று சுமார் 3,56,565 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர், இலங்கையின் கிழக்கு வானில் மிக பிரகாசமானதும், மிக பெரியதுமான நிலவை அவதானிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
ஜனவரி மாதம் இரண்டாம் திகதி கிழக்கு வானில் நிலவு மறைவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பிரகாசமான நிலவை அவதானிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இவ்வாறான அரிய சந்தர்ப்பம் எதிர்வரும் பௌர்ணமி தினமான ஜனவரி மாதம் 31ஆம் திகதியும் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நிலவானது பூமிக்கு அருகில் பயணம் செய்வதனால், நிலநடுக்கம், சுனாமி, சுறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.



