அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், குருதி சுத்திகரிப்பு சிகிச்சை; முதல் நோயாளிக்கு இன்று வழங்கப்பட்டது

🕔 August 20, 2017

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறு நீரக நோயாளியொருவருக்கு, குருதி சுத்திகரிப்பு சிகிச்சை முதன் முதலாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றதாக, அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும், குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவ வேண்டும் என்கிற, ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைவாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மேற்படி இயந்திரம் கிடைக்கப் பெற்றதாகவும் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் கூறினார்.

குறித்த குருதி சுத்திகரிப்பு இயந்திரத்தை, சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரத்துக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் வழங்கியிருந்தார்.

கடந்த மாதமாளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு பிரிவை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் திறந்து வைத்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவில் முதலாவது நோயாளிக்கான குருதி சுத்திகரிப்பு சிகிச்சை இன்று காலை வழங்கப்பட்ட போது, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், வைத்தியசாலையின் திட்டப் பிரிவுக்கான வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம். தாஸிம் மற்றும் குருதி சுத்திகரிப்பு பிரிவுக்கான வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். முபாரிஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

கடந்த காலங்களில் இப் பிராந்தியத்திலுள்ள சிறு நீரக நோயாளிகள், குருதி சுத்திகரிப்பு சிகிச்சையினைப் பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட தூரம் பயணித்து அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சென்று வந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்