ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

🕔 July 23, 2015

ACJUC - 01

– அஸ்ரப் ஏ. சமத் –

.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து, இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள், இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள – ‘தீவிரவாதத்துக்கு எதிரான பிரகடனத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக, ISIS  காணப்படுகின்றது என்பதில் – எவ்வித சந்தேகமும் இல்லை எனவும், அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ISIS அமைப்பில் இணைந்த கொண்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், சிரிய நாட்டில் மரணமடைந்ததாக அண்மையில் பரவிய செய்தியினை வைத்துக் கொண்டு, இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்க முற்படும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்றும் இன்றைய தீவிரவாதத்துக்கு எதிரான பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) இயக்கம் மற்றும் தீவிரவாதம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன், இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து, இன்று வியாழக்கிழமை கூட்டு பிரகடனமொன்றினை மேற்கொண்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) இயக்கத்தில் இணைந்து கொண்ட இலங்கையர் ஒருவர், அண்மையில் சிரியாவில் பலியானதாக செய்தியொன்று வெளியாகியுள்ள நிலையில், இந்தக் கூட்டுப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில், அதன் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, இந்தப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘தீவிரவாதத்திற்கு எதிரான’ இப் பிரகடன நிகழ்வில், இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களான – முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா, ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் இஸ்லாமி, ஜமாத்துல் சலாமா, ஜம்மியத்துல் சபாப், அல் முஸ்லீமாத், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு, உலக முஸ்லிம் இளைஞர் அமைப்பு, வை.எம்.எம்.ஏ, தப்லீக் ஜமாஅத், அகில இலங்கை தொளஹீத் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவையும் இணைந்து கொண்டன.

இதன்போது, அங்கு  வருகை தந்திருந்த உலமா சபையின் முக்கியஸ்தர்களும், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கருத்துத் தெரிவிக்கையில்;

“ISIS இயக்கமானது, ஒரு கடுமையான – இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒன்றாகும். இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாகசெயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது என்பதில் எவ்விதசந்தேகமும் இல்லை.

ISIS அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தொடர்புபட்டிருந்ததாகவும், சிரியாவில்அவர் இறந்துள்ளதாகவும் ஊடகங்களின் ஊடாகவே  நாம் அறிந்தோம். இந்தநாட்டில் வாழும் முஸ்லிம்கள்,ஏனைய சமுகங்களோடு அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும், வாழ்ந்து வருகின்றனர்.

ISIS அமைப்பில் இயலங்கையர் ஒருவர் தொடர்புபட்டிருந்ததாக வெளியான செய்தி குறித்து, இந்தநாட்டின் அரசாங்கம், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் பரிசீலித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கைக்கு, உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர்  பூரண ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்குவோம். அத்துடன், இந்த தீவிரவாத இயக்கத்தை, உலகிலுள்ள சகல முஸ்லிம் நாடுகளும்,  இஸ்லாமிய அமைப்புக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன. ISIS இயக்கமானது, இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறான இயக்கங்களுக்கு, எமது நாட்டு முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள். இவ் இயக்கம் பற்றி – ஜூம்ஆ பிரசங்களிலும், உலமாக்கள் ஊடகவும் முஸ்லிம்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.

அதேபோன்று மத்திய கிழக்குநாடுகளுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்வோரும், உயர்கல்வி மற்றும் இஸ்லாமிய கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரும் கூட, இவ்வாறான இயக்கங்களை ஆதரிக்கமாட்டர்கள்.

ஆனால், இலங்கையிலுள்ள சில ஊடகங்கள் தவறான கற்பிதங்களை உருவாக்க முயன்று வருகின்றன.  இலங்கை முஸ்லிம்களும் தீவிரவாத அமைப்பில் உள்ளனர் என்று, சோடித்துக் காட்டுகின்றனர்.  இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையைச் சேர்ந்த நபரொவருவர் ISIS இயக்கத்தில் இணைந்த நிலையில், சிரியாவில் கொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தி எமக்கு கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு ஒரு விடயம் நடந்துள்ளது. அதற்காக, முழு முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என சித்தரிக்கக் கூடாது.

மேற்குலக ஊடகங்கள்,  ‘ஜிகாத்’ என்ற சொல்லுக்கு – கொலை செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களைக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்ட, ‘சமுகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்’ எனும் வெளியீடுகளில், ஜிகாத் பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது”  என்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேக் எம்.எம்.ஏ. முபாரக் மௌலவி, சபையின் ஊடகபேச்சாளர் எம்.எம்.ஏ. தஹ்லான் மற்றும் ஊடகச் செயலளர் அஷ்ஷேக் பாசில் பாருக் ஆகியோரும் – இதன்போது,  ஊடகவியலாளர் மத்தியில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, ஊடகவியலாளர்களின்  கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்