பசில் ராஜபக்ஷவின் கறுப்புப் பணத்துக்காக, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தவர் ஜெமீல்: கல்முனை மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் பதிலடி
– எம்.வை. அமீர் –
பசீல் ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்ட கறுப்புப் பணத்துக்காக, கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட,, சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான ‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு, அன்று ஆதரவளித்த ஜெமீல், இன்று – மு.கா. தலைவர் கறுப்புப் பணம் பெற்றதாக மேடைகளில் பேசித் திரிவது, அரசியல் கபடத்தனமானதாகும் என்று, மு.காங்கிரசின் அதியுயர்பீட உறுப்பினரும், அந்தக் கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளரும், கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
‘பெட்டிகள் மீது காட்டும் ஐக்கியத்தினை மு.காங்கிரசின் தலைவர் சமூக நலனில் காட்டுவதில்லை’ என, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மு.காங்கிரசிலிருந்து விலகிச் சென்று, அ.இ.ம.காங்கிரசில் தற்போது இணைந்துள்ளவருமான ஏ.எம். ஜெமீல், கடந்த புதன்கிழமையன்று சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரை நிகழ்த்தும் போது கூறியிருந்தார். ஜெமீலின்அந்த உரை, ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
ஜெமீலுடைய அந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், கல்முனை மாநகரசபையின் மு.கா. உறுப்பினர் பிர்தௌஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே, ஜெமீல் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஜமீல் – முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் விமர்சிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. அன்று பணத்துக்காகவும், பதவிக்காகவும் பேரியல் அஷ்ரபுடன் சேர்ந்துகொண்டு, மு.கா. தலைவர் ஹக்கீமை விமர்சித்தார். பின்பு மன்னிப்பளிக்கப்பட்டு, முன்னாள் பிரதியமைச்சர் நிஜாமுதீனின் தயவினால் முஸ்லிம் காங்கிரசில் சேர்க்கப்பட்டார். பின்பு அரசியல் அதிகாரம் கிடைத்ததும் முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் இவரூடாக, கட்சிக்குள் எவ்வாறு ஊடுருவினார்கள் என்பதனை நாங்கள் அறிவோம்.
றிஸாத்தின் பணம் என்ன வர்ணம்?
வடக்கிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்கள், அதே அகதி வாழ்க்கையினை, இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அன்று ஓடுவதற்கு துவிச்சக்கர வண்டிகூட இல்லாத நிலையில், அகதிமுகாமில் அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தில் வாழ்க்கையை நடாத்திய ரிசாத் பதியுதீனால் மட்டும், இவ்வளவு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க எவ்வாறு முடிந்தது? இந்த பணத்துக்கு என்ன வர்ணம் வழங்குவது? இவைகள் ஹாலாக உழைத்த பணமா என்பதையும் றிசாத் பதியுத்தீனுக்கு வக்காலத்து வாங்கும் – ஜெமீல் கூற வேண்டும்.
மைத்திரிக்கு றிசாத் ஆதரவளித்ததன் மர்மம்
கடந்த ஜனாதிபதி தேர்தளுக்கு முன்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் என்று அறிக்கை விட்டனர். அப்போது, மைத்திரிபால சிறிசேனவின் அணியில் ஹுனைஸ் பாறுக் சேர்ந்து கொண்டார். அதன் காரணமாக, வன்னி மக்கள் ஹுனைஸ் பாறூக்கின் பின்னால் அணி திரண்டனர். இதனால் பதட்டமடைந்து, தன்னை வன்னி மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்ற பயத்தினால்தான், மைத்திரியின் பக்கம் றிசாத் சாய்ந்து கொண்டார்.
அதுமட்டுமல்ல, அலறி மாளிகைக்குள் – நாமல் ராஜபக்ஷவின் நண்பரான, நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா மீது ரிசாத் பதியுதீன் தாக்குதலை மேற்கொண்டார். அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத நாமல் ராஜபக்ஷ, ரிசாத் பதியுதீனுக்கு கன்னத்தில் அறைந்தார். அப்படி அடிவாங்கிய ஆத்திரத்தினால்தான், மைத்திரிபால சிறிசேனவுடன் ரிசாத் பதியுதீன் இணைந்துகொண்டார்.
இந்த இரு சம்பவங்களும் நடைபெற்றிருக்காவிட்டால், இன்றும் ரிசாத் பதியுதீன் – மஹிந்த ராஜபக்சவுனையே இருந்திருப்பார். ஏனென்றால் பசில் ராஜபக்ஷவுடனான கறுப்புப்பண கணக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன.
ஜெமீல் ஓடிய ஓட்டம்
முஸ்லிம் காங்கிரசின் எந்தவொரு தீர்மானமும், கட்சித் தலைவரால் தனித்து எடுக்கப்படுவதில்லை. கட்சியின் அதியுயர்பீடத்தினுடைய தீர்மானத்தின்படியே எடுக்கப்படும். அந்தவகையில், முஸ்லிம்களின் எதிரியான மஹிந்த ராஜபக்சவை விட்டு விலகுவதற்கு ஆரம்பத்திலேயே, மு.காங்கிரஸ் தீர்மானமொன்றினை எடுக்கும் பொருட்டு, கட்சியின் அதியுயர்பீட கூட்டம் நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கே ஆதரவளிக்க வேண்டுமென்று, அதியுயர்பீடக் கூட்டத்தில் தன்பக்கம் சிலரை இணைத்துக்கொண்டு, முதன்முதலில் கோசமிட்டவர் இந்த ஜமீல்தான். இதனால்தான், தீர்மானம் எடுப்பதற்கு தாமதமாகியது. இதற்கு நானும் அதியுயர்பீட உறுப்பினர்களும் சாட்சியாளர்களாவர்.
மகிந்தவை ஆதரிப்பதற்காக, திரைமறைவிலே ஜமீல் ஓடிய ஓட்டம் தொடக்கம், பசில் ராஜபக்சவின் வீட்டில் தவம்கிடந்தது வரைக்கும், நடந்தவை அனைத்தினையும் மு.கா. தலைவர் நன்கு அறிந்திருந்தார். அன்று, மக்களின் விருப்புக்கு மாறாக, ஜமீலின் எண்ணப்படி, மகிந்தவின் பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருந்தால், பசீல் ராஜபக்சவினால் ஜமீலுக்கு பல கோடி ரூபாய் கறுப்புப்பணம்வழங்கப்பட்டிருக்கும். இதற்கு திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் சாட்சியாவார்.
ஜமீல் யாரென்பதனை நன்கு அறிந்துகொண்டமையினாலேயே, அவருக்கு முதலமைச்சர் பதவியினையோ, அமைச்சு பதவிகளையோ வழங்குவதற்கு, தலைவர் முன்வரவில்லை என்பதனை நாங்கள் நன்கு அறிவோம்.
பசீலிடம் பெற்ற கறுப்புப் பணம்
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட திவிநெகும சட்டமூலம், மு.கா. தலைவர் நாட்டில் இல்லாத சமயம்பார்த்து, கிழக்கு மாகாணசபைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, குழுக்களின் தலைவர் என்ற ரீதியில், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை ஜமீல் வழிநடத்தி, இச்சட்டத்துக்கு ஆதரவளித்ததும், பசீல் ராஜபக்சவின் கறுப்புப் பணத்துக்காகத்தான் என்பதனை நாங்கள் மறந்துவிடவில்லை.
வடக்கின் வசந்தம் மூலமாகவும், வடக்கு தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மூலமாகவும், பசில் ஜமீலின் தற்போதைய தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு ராஜபக்ஷ கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வழங்காதிருந்தால், இன்று அந்தப்பணத்தில் ஜமீலினால் சவாரி செய்ய முடியாதிரிந்திருக்கும்.
மு.கா. தலைவர் ஹக்கீம் – கறுப்புப் பணம் பெற்றிருந்தால், மஹிந்த ராஜபக்சவுடனும் ரணில் விக்கிரமசிங்கவுடனும், தன் சமூக மக்களுக்காக, நெஞ்சு நிமிர்த்தி பலசுற்றுப் பேச்சுக்களை துணிவுடன் நடத்தியிருக்க முடியாது. அத்துடன், மகிந்தவை விட்டு மு.கா. தலைவர் வெளியேறியபோது, மகிந்த அதிர்ச்சி அடையவுமில்லை. ஆனால், ரிசாத் பதியுத்தீன் வெளியேறியபோது, மஹிந்த அதிர்ச்சியடைந்தார். அந்தளவுக்கு மகிந்தவின் ஊழலில், ரிசாத் பதியுதீன் பங்குதாரராக இருந்திருக்கின்றார்.
கடந்த அரசாங்கத்தில் செய்த ஊழலுக்காக, இன்று – ரிசாத் பதியுதீனுக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ரிசாத் இன்று அமைச்சராக இல்லாதிருந்திந்தால், ஊழல் குற்றச்சாட்டின் பேரில், பசில் ராஜபக்ஷவுடன் ரிசாத்தும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். ஆனால், மு.கா. தலைவர் ஹக்கீம் – கறுப்புப் பணம் பெற்றிந்தால், குறைந்தது – நீதி மன்றத்தில் வழக்குகளையாவது தாக்கல் செய்யலாமே. மேடைகளில், மக்களை கவரும் பொருட்டு, உண்மைக்கு மாறாக பொய்யுரைப்பதனால், மக்களை முட்டாளாக்க முடியாது.
ரிசாத்திடம், தான் வாங்கிய கறுப்பு பணத்தினத்துக்காக, முஸ்லிம் காங்கிரசை விட்டு, ஜமீல் வெளியேறினாலும், ஜெமீலின் சொந்த பிரதேசமான சாய்ந்தமருதுவின் மு.காங்கிரஸ் மத்தியகுழு உறுப்பினர் ஒருவரையாவது, ஜெமீலால் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை. தனது சுயநலத்துக்காகவும், பதவி பணத்துக்காகவும் – ஊரையும், மக்களையும் விற்று பிழைப்பு நடத்தும் ஜமீலினால், ஊடகங்களுக்கு அபாண்டமான செய்தியை வழங்கலாமே தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரசை பலமிழக்க செய்ய முடியாது.
தொடர்புபட்ட செய்தி (ஜெமீலின் உரை): மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு