பாவாடை தேவையில்லை; ஆண் ஊழியர்களுக்கு விடுதலை

🕔 July 21, 2015

Skirt men - 01ஸ்கொட்லான்டிலுள்ள (Scotland) உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் பாவாடை அணிந்து கொள்ள வேண்டுமென விதிக்கப்பட்டிருந்த உத்தரவினை, குறித்த விடுதியின் நிருவாகம் நீக்கியுள்ளமை தொடர்பில், அங்கிருக்கும் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ஸ்காட்லாந்திலுள்ள ஹூட்டானன்னி  (Hootananny ) எனும் உணவு விடுதியிலுள்ள ஆண் பணியாளர்கள், அந்த நாட்டின் பாரம்பரிய வடிவிலான பாவாடையினை, கடமை நேரத்தில் அணிந்து  கொள்ள வேண்டும் என்பது – நிருவாகத்தின் உத்தரவாக இருந்தது.

பாவாடையை அணிந்து கொள்வதில் – ஆண்களுக்கு வெட்கமும், தயக்கமும் இருந்தபோதும், குறித்த விடுதியில் நல்ல சம்பளம் கிடைப்பதால், அங்குள்ள ஆண் பணியாளர்கள், பாவாடையினை அணிந்து வந்தனர்.

ஆயினும், அந்த விடுதிக்கு வரும் பெண்கள், மது அருந்திவிட்டு – பாவாடை அணிந்திருக்கும் ஆண் ஊழியர்களைக் கிண்டல் செய்ததாகவும், ஆண் ஊரியர்களின் பாவாடையை இழுத்து, சில பெண்கள் பாலியல் ரீதியான இம்சைகனைப் புரிந்ததாகவும், அங்குள்ள ஊழியர்களால் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இவ் விடயம் தொடர்பில், குறித்த விடுதியின் உதவி முகாமையாளர் லைன் ஹுவி தெரிவிக்கையில்; இவ்வாறான சம்பவங்கள் வார இறுதி நாட்களில், வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகை தரும் நேரங்களில்தான் நடைபெறுவது வழமையாகும். அங்கு வரும் பெண்கள் – ஆண் ஊழியர்களின் பாவாடையை இழுத்து, மோசமாக நடந்து கொண்டனர். இதனால், ஊழியர்கள் மிகவும் வெறுப்படைந்து விட்டனர் என்றார்.

மேற்படி நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தமையினால், இனிமேல் பாவாடைகளை அணிந்து கொண்டு வேலை செய்ய முடியாது என, ஊழியர்கள் தெரிவித்து விட்டனர்.

இதனைக் கருத்திற் கொண்ட நிருவாகமானது, இனிமேல் – ஆண் ஊழியர்கள் பாவாடை அணியத் தேவையில்லை என அறிவித்துள்ளது. நிருவாகத்தின் இந்த முடிவு தொடர்பில், அங்குள்ள ஆண் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தற்போது, ஹூட்டானன்னி உணவு விடுதியில் கடமையாற்றும் ஆண் ஊழியர்கள், நீண்ட காற்சட்டை (trousers) அணிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்