கதிரைகளுக்கான போர்!

🕔 July 22, 2015

Article - 02

ம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க, அவற்றினால் முடியாது.

அம்பாறை மாவட்டம் – முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டது. சிங்களவர்கள் இரண்டாவது பெரும்பான்மை. தமிழர்கள் இந்த மாவட்டத்தில் சிறுபான்மையாக உள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதில் ஓர் ஆசனம், அநேகமாக தமிழர் தரப்புக்குச் சென்று விடும். ஏனைய 06 ஆசனங்கள்தான் ‘அடி’படுபவை.

கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில், ஐ.ம.சு.கூட்டமைப்பு 04 ஆசனங்களையும், ஐ.தே.கட்சி 02 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 01 ஆசனத்தினையும் கைப்பற்றியிருந்தன. இதில் சொல்ல வேண்டிய விடயமென்னவென்றால், ஐ.தே.கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரசின் வேட்பாளர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து, அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், அந்தத் தேர்தலில் – ஐ.ம.சு.கூட்டமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று 04 உறுப்பினர்களை வென்றது. இதில் அதாஉல்லா மட்டுமே முஸ்லிம். மற்றையவர்கள்; சிங்களவர்கள். ஐ.தே.கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. மு.காங்கிரசின் வேட்பாளர்களான ஹரீஸ் மற்றும் பைஸால் காசிம் ஆகிய இருவரும் அந்த ஆசனங்களுக்குத் தெரிவாகினர்.

இவை 2010 பொதுத் தேர்தல் நிலைவரமாகும்.

கடந்த பொதுத் தேர்தலோடு ஒப்பிடுகையில் – இம்முறை, அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில், அநேக விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவேயில்லை. 2010 ஆம் ஆண்டு போலவே, இம்முறையும் தமிழரசுக் கட்சி – களத்தில் குதித்திருக்கிறது. ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து அமைச்சர் அதாஉல்லாவும், அவருடைய இரண்டு வேட்பாளர்களும் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றனர். அதேபோல், ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைத்து, யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் என்னவென்றால், கடந்த முறை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் களமிறங்கிய அதே மூன்று வேட்பாளர்கள்தான் – இம்முறையும் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் இம்முறை பொதுத் தேர்தலில் முதன்முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது மயில் சின்னத்தில் தனித்துக் குதித்திருப்பது புதிய விடயமாகும்.

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு அணியும் 10 வேட்பாளர்களை களமிறக்க வேண்டும். மு.காங்கிரஸானது, ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டிடும் நிலையில் 03 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டும் களமிறக்கியுள்ளது. தேசிய காங்கிரஸானது ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்ற நிலையில், அவர்கள் தரப்பிலும் அமைச்சர் அதாஉல்லா உள்ளடங்கலாக, 03 பேர் களமிறங்கியுள்ளனர். ஆனால், அ.இ.ம.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால், அந்தக் கட்சி சார்பில் 10 வேட்பாளர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிப்போய் விடுமோ என்கிற கவலையும், அதனால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டு விடுமோ எனும் அச்ச நிலையொன்றும் சமூக அக்கறையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பில் களத்திலுள்ள அரசியல்வாதிகளில் கணிசமானோருக்கு எந்தவிதமான சொரணைகளும் இல்லை.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. இந்தக் கட்சியானது, தனித்தும் தேசிய கட்சிகளுடன் இணைந்தும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. ஆனால், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை எந்தவொரு பொதுத் தேர்தலிலும் தனியாகக் களமிறங்கியது கிடையாது. தேசிய கட்சிகளுடன், குறிப்பாக, சுதந்திரக் கட்சி தலைமை வகிக்கும் கூட்டணியுடன் சேர்ந்துதான், தேசிய காங்கிரஸ் – இதுவரை பொதுத் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது.

முஸ்லிம் கட்சிகள் – தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றபோது, ஆசனப் பங்கீட்டில், 03 அபேட்சகர்களை தமது கட்சி சார்பில் பெற்றுக் கொள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. ஒரு வாக்காளருக்குள்ள மூன்று விருப்பு வாக்குகளையும், தமது அபேட்சகர்களுக்கு ‘அலுங்காமல் குலுங்காமல்’ பெற்றுக் கொள்ளலாம் எனும் நம்பிக்கையில்தான், முஸ்லிம் கட்சிகள் மூன்று வேட்பாளர்களைக் களமிறக்குகின்றன.

இவ்வாறான பின்னணியில், அம்பாறை மாவட்டத்தில் இப்போது களமிறங்கியுள்ள முஸ்லிம் கட்சிகளுக்குள்ள வெற்றி வாய்ப்புகள், எவ்வாறு அமையப் போகின்றன என்பது குறித்து, பல்வேறு அனுமானங்கள் உள்ளன.

முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரையில், அந்தக் கட்சியானது, ஐ.ம.சு.முன்னணியோடு இணையாமல், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிடுவது, அந்தக் கட்சிக்கு சாதமாகும். ஐ.ம.சு.முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிருகின்றமையும், முஸ்லிம் மக்களிடையே மஹிந்த ராஜபக்ஷவுக்கு விரோதமான மனப்பான்மை இன்னும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆசனப் பங்கீட்டில் 03 முஸ்லிம் வேட்பாளர்களைப் பெற்று, அவர்களைக் களமிறக்கியிருப்பதால், மூன்று உறுப்பினர்களையும் வென்றெடுக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளமையானது, மு.கா.வுக்குள்ள மற்றுமொரு சாதக நிலையாகும்.

மு.காங்கிரசானது, தனது மூன்று வேட்பாளர்களையும் மூன்று பிரதேசங்களிலிருந்து நிறுத்தியுள்ளது. ஆனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களில் மு.கா. சார்பாக வேட்பாளர்கள் எவரும் களமிறக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது அந்தக் கட்சி சந்திக்கும் மிகப்பெரும் சவாலாகும். மு.கா. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள பிரதேசத்தவர்களிடம், மு.கா.வுக்கு வாக்களிக்கும் ஆர்வத்தினை உருவாக்குவதென்பது இலகுவாகும். ஆனால், அதே ஆர்வத்தினை, தமது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத பிரதேச மக்களிடையே, மு.காங்கிரஸ் எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றது என்பதில்தான் அந்தக் கட்சியின் வெற்றிவாய்ப்பு தங்கியுள்ளது.

இன்னொரு புறம், மூன்று ஆசனங்களை வென்றெடுக்கும் நோக்குடன் மு.காங்கிரஸ் களமிறக்கியுள்ள மூன்று வேட்பாளர்களில் இருவர் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆவர். மற்றையவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர். மேற்படி மூவரும் மு.காங்கிரசுக்கு பழைய முகங்கள். கடந்த பல தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனால், இந்தத் தேர்தல் களத்தில், புதிய முகங்களை அபேட்சகர்களாகக் காண்பதற்கு ஆசைப்பட்ட மு.காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு, சற்று ஏமாற்றம்தான்.

இன்னொருபுறம், மு.கா. சார்பான அபேட்சகர்கள் மூவரும், பதவிகள், அதிகாரத்தில் இருந்தவர்கள் என்பதனால், அவர்கள் தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றமையினையும் மறைந்து விட முடியாது.

ஆக, இவ்வாறான பலவீனங்களைக் கடந்துதான், இந்தத் தேர்தலில் மு.காங்கிரஸ் பயணிக்க வேண்டியுள்ளது.

மறுபுறம், மு.காங்கிரசின் எதிராளியான முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, தனது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பாறை மாவட்டத்தில் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதாஉல்லா உட்பட மூன்று உறுப்பினர்கள்தான் அவரின் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து, இம்முறை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில், அதாஉல்லாவின் கட்சிக்காரரான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆக, போட்டியிடுகின்ற மூன்று வேட்பாளர்களையும், தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவரையும் சேர்ந்து, 04 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வென்றெடுப்பேன் என அதாஉல்லா கூறியிருப்பது, அவரின் தீவிர தொண்டர்களுக்கு கிளுகிளுப்பான செய்திதான். அதற்கு அப்பால், அந்தக் கூற்றானது அரசியல் நகைச்சுவையாகும்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் அமைச்சர் அதாஉல்லா, சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதே வழமையாகும். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது, இதுவரை பொதுத் தேர்தலொன்றில் தனித்துக் களமிறங்கியது கிடையாது. பொதுத் தேர்தலில் அதாஉல்லா போட்டியிடும் போதெல்லாம், அவருடன் சேர்த்து இன்னுமிருவரையும் தனது கட்சி சார்பாகக் களமிறக்குவார். கடைசியில், குறித்த இரு வேட்பாளர்களும் பெற்றுக் கொடுக்கும் வாக்குகளால், அதாஉல்லா வென்று விடுவார். அவருடன் இணைந்து போட்டியிட்ட மற்றைய இருவரும் தோற்று விடுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இப்படித்தான் நடந்து வருகிறது.

அதுபோல், இம்முறையும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு, இரண்டு வேட்பாளர்கள் சிக்கியிருக்கின்றனர். ஒருவர் இறக்காமத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் பொத்துவிலைச் சேர்ந்தவர்.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, கல்முனை மற்றும் பொத்துவில் என்று, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மூன்று தொகுதிகள் உள்ளன. அந்தவகையில், அதாஉல்லா பொத்துவில் தொகுதியைச் சேர்ந்தவர். அவர் கட்சி சார்பாகக் களமிறக்கப்பட்டுள்ள ஏனைய இரு வேட்பாளர்களில் ஒருவர் பொத்துவில் தொகுதியைச் சேர்ந்தவர், மற்றையவர் சம்மாந்துறை தொகுதியினைச் சேர்ந்தவராவார். அந்தவகையில், கல்முனைத் தொகுதியில் இம்முறை அதாஉல்லா இல்லை.

இன்னொருபுறம், கடந்த பொதுத் தேர்தல்களில் அதாஉல்லா களமிறக்கிய வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற அதாஉல்லாவின் இரண்டு வேட்பாளர்களும் மிகவும் பலவீனர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அதுவும், முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் இறக்காமம் பிரதேசத்தில், அரசியலுக்கு அறிமுகமேயில்லாத ஒருவரை, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, என்ன தைரியத்தில் வேட்பாளராகக் களமிறக்கினார் என்று புரியவேயில்லை.

இதேவேளை, அதாஉல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்று, ஒரு காலத்தில் அவரின் கோட்டையாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு, அக்கரைப்பற்றில், அதாஉல்லாவின் ஆதிக்கம்தான். அக்கரைப்பற்றுக்குள் எதிர்க்கட்சிகள் நுழையவே முடியாது. ஆனால், இப்போது அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி கண்டுள்ளது. அதாஉல்லாவோடு, இருந்து அரசியல் செய்த பலர், இப்போது மு.கா. பக்கம் மாறியுள்ளனர்.

மேலும், கடந்த பொதுத் தேர்தல்களின் போதெல்லாம், அதாஉல்லா அமைச்சராக இருந்தார். அதனால், அவரின் பதவியினையும் அதிகாரங்களையும் தேர்தல்களில் பயன்படுத்திக் கொண்டார். ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், அதாஉல்லாவின் தேர்தல் வெற்றிகளுக்கு, அவரின் அமைச்சுப் பதவியானது பெரும் துணையாக நின்றது. ஆனால், இப்போது அதாஉல்லாவிடம் அதிகாரமில்லை, அமைச்சுப் பதவிகளில்லை. அதாஉல்லா தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு, அமைச்சுப் பதவிகள் இல்லாமல், அவர் முகம்கொள்ளும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

இதேவேளை, அதாஉல்லாவின் அரசியல் எதிராளிகளான மு.காங்கிரசினர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து கொண்டு, அதாஉல்லாவை இந்தத் தேர்தலில் சந்திக்கப் போகின்றனர்.
அந்தவகையில், அமைச்சர் அதாஉல்லாவுக்கு இந்தப் பொதுத் தேர்தலானது, மிகவும் அச்சுறுத்தலாகவே அமையப்போகிறது. இம்முறை அம்பாறை மாவட்ட தேர்தல் களம் அதாஉல்லாவுக்கு ‘வோட்டலூ’ வாக அமைந்து விடும் என்கின்றனர் மு.கா. தரப்பினர். ஆக, இந்தக் களத்தை அதாஉல்லா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை கொஞ்சம் காத்திருந்து காண்போம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் புதிதாகக் களமிறங்கியிருக்கிறது. குறிப்பாக, றிசாத் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கும் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் மு.கா.விலிருந்து பிரிந்து சென்றவர்கள், மு.கா. அதிருப்தியாளர்கள்.

றிசாத் பதியுத்தீனின் வேட்பாளர்களான – கல்முனை மாநகரசபையின்; முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. மஜீத் போன்றோர் மு.காங்கிரசிலிருந்து விலகிச் சென்றவர்கள். இவர்களுடன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ. ஜெமீலும் மு.கா.விலிருந்து பிரிந்து சென்று, றிசாத் பதியுத்தீனின் கட்சியில் இணைந்துள்ளார்.

குறிப்பாக, சிராஸ் மீராசாஹிப் மற்றும் ஜெமீல் ஆகிய இருவரும் சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, மு.கா.வின் சாய்ந்தமருது வாக்கு வங்கியில் இவர்களால் சரிவினை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதை, அத்தனை இலகுவில் மறுத்து விட முடியாது. இந்த நிலைவரத்தினை எதிர்கொள்வதற்கான வியூகத்தை மு.கா. வகுக்காமல் விடாது. சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரசின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், மு.கா.வின் உயர்பீட அங்கத்தவர்கள் என்று ஏராளமானோர் இருக்கின்றமையினால், சாய்ந்தமருது அரசியலில் சூடு மிக அதிகமாக இருக்கும்.

ஆயினும், அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் கட்சிக்கு ஆசனங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள், இப்போதைக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், மு.காங்கிரசுக்கு கிடைக்கும் ஆசனமொன்றை, றிசாத் கட்சினரால் இல்லாமலாக்கி விடுவதற்கான சாத்தியங்கள் ஓரளவு தெரிகின்றன.

எது எவ்வாறாயினும், பொதுத் தேர்தல் நிறைவடையும் போது, அம்பாறை மாவட்டத்தில் எதிர்பாராத சில ‘இடி’கள் இறங்கப் போவது மட்டும் உறுதி. அந்த இடிகளைத் தாங்குவதற்கான மனநிலையினை, நமது அரசியல்வாதிகளுக்கு இறைவன் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதைத் தவிர, நம்போன்ற சாமானியர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?!

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்