விடைகள் இல்லாத கேள்விகள்; குழப்பங்கள் தவறுகளுடன் வினாத்தாள்கள்: கொட்டாவி விடுகிறதா, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்

🕔 June 21, 2017

– மப்றூக் –

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்களில், பல்வேறு குழப்பங்களும் பிழைகளும் காணப்பட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பரீட்சை நேற்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி பரீட்சையினை  நடத்தியிருந்தது.

குறித்த முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் 01 மற்றும் 02 என, இரு பிரிவுகளாக அமைந்திருந்தன.

முதலாம் வினாத்தாள் 45 நிமிடங்களைக் கொண்டதாகவும், 02ஆம் வினாத்தாள் 01 மணித்தியாலம் 15 நிமிடங்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன.

குறித்த வினாத்தாள்களில் கேள்விகளும், அவற்றுக்கான சரியான விடைகளைத் தெரிவு செய்யுமாறு கூறி, பதில்களும் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் மிகச் சரியான பதிலை, மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், குறித்த வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு வழங்கப்பட்ட விடைகளில், சரியான விடை காணப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கேள்வியொன்றுக்கு சரியான விடையை தெரிவு செய்து இடைவெளியில் எழுதுமாறு,  வினாத்தாளில் அறிவுறுத்தப்பட்டிருந்த போதும், அதற்கான இடைவெளி எதுவும் அங்கு காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பல தவறுகள் மற்றும் குழப்பங்களுடன் மேற்படி – பரீட்சை வினாத்தாள்கள் இருந்ததாகவும், அதனால் மாணவர்கள் சங்கடங்களை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணமானது, கல்வி நிலையில் இலங்கையில் 09 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்