அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

🕔 May 19, 2017

– எம்.ஐ.எம். றியாஸ் –

மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை உடனடியாக இடம்மாற்றம் செய்யுமாறும், மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களும், அதிபர்களும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த நிலையிலேயே, அக்கரைப்பற்றுக்கு மன்சூர் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் பணியாற்றிய காலப் பகுதியிலும், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையிலேயே அங்கிருந்து இடம்மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூரைக் கொண்டு வந்தமையின் பின்னணியில், அதிகாரத்திலுள்ள அக்கரைப்பற்று அரசியல்வாதியொருவர் உள்ளார் என புகார் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக ஏற்கனவே பணியாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் தொடர்பில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த மேற்படி அரசியல்வாதி மிகவும் ஆத்திரத்துடன் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

தற்போது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடமாற்றப்பட்டமையினை அடுத்து, அக்கரைப்பற்றில் கடமையாற்றிய மௌலவி காசிம், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் கீழ் பணியாற்றுகின்றவர்களில் பலர், இனி, அரசியல் பழிவாங்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் எனவும் அச்சம் வெளியிடப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்