முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம்

🕔 May 19, 2017
 
– பிறவ்ஸ் –

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கான தீர்வினைப் பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதற்காக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும்நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடிதம் ஒன்றை அனுப்புவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள கடும்போக்குவாத கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில்; அமைச்சர்களும் நாடாமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய காட்டமான கருத்துகளை தெரிவித்தனர். அத்துடன், இதன் பின்னணியில் செயற்படும் இனவாத சக்திகள் தொடர்பாக இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் பைசர் முஸ்தபா, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், எம்.எச்.எம். நபவி மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் பங்குபற்றினர்.

அமைச்சர் ஹலீமின் மக்கள் தொடர்பு அதிகாரி பி.எம்.ஜி.எம்.ஆர். மலிக் இந்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்