டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

🕔 April 7, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

டெங்கு காய்ச்சலின் தீவிரம் சற்று குறையத் துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், டெங்கு அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளம் வந்த பிறகே அணை கட்டிப் பழகிய தோசம், நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பதற்கு – டெங்கு மரணங்களின் பிறகு, நாம் செயற்பட்ட விதம் – நமக்கான உதாரணங்களாகும். சூழல் தொடர்பான நமது அலட்சியங்கள்தான் டெங்காக மாறி நம்மை கொன்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தில்தான் டெங்கு காய்ச்சலினால்; அதிக மரணங்கள் அண்மையில நிகழ்ந்துள்ளன. அதிலும் திருகோணமலை மாவட்டதில்தான் பாதிப்பு அதிகமாகும். திருகோணமலை மாவட்டத்தில் 02 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 1300 பேர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

டெங்கு காய்ச்சலானது – டெங்கு வைரஸ் மூலம் ஏற்படுகிறது. ஒரு வகை நுளம்பின் மூலமாக டெங்கு வைரஸ் பரவுகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த விடயங்களாகும். டெங்கு வைரஸ் பரவுகின்றமைக்குக் காரணமான நுளம்புகள் – எவ்வாறான சூழலில் உருவாகும் என்பதும், அதனை தடுக்கும் விதங்கள் குறித்தும் நாம் அறிவோம். இருந்தாலும், அவ்விடயத்தில் நாம் அக்கறை கொள்வதில்லை. டெங்கு நுளம்புகள் உருவாகாமல் தடுப்பது – பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மட்டுமான கடமை என்று, நம்மில் கணிசமானோர் தங்களுக்குள் ஒரு போலி எண்ணத்தை விதைத்து வைத்திருக்கின்றார்கள். அதனால், தங்களைச் சுற்றியுள்ள சூழல் எப்படியிருந்தாலும், அது குறித்து மக்களில் கணிசமானோர் கவலை கொள்ளாதவர்களாகவே உள்ளனர்.

‘வீதியில் இடைஞ்சல் தரும் வகையில் கிடக்கும் ஒரு கல்லினை அகற்றுவதும் தர்மமாகும்’ என்கிறது இஸ்லாம். சுற்றுச் சூழலை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு மக்களை இதன் மூலம் இஸ்லாம் தூண்டுகிறது. ஆனால், தமது வீட்டுச் சூழல் குறித்துக் கூட, அநேகர் அலட்டிக்கொள்வதில்லை. டெங்கு நுளம்பு பெருகும் வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டும் காணாமல் விட்டமையின் விளைவுதான் டெங்கு காய்ச்சலினால் ஏற்பட்ட மரணங்களாகும்.

டெங்கு காய்ச்சல் வானத்திலிருந்து இறங்குவதில்லை. நமது வீட்டுச் சூழலில் உருவாகும் நுளம்புகள் காவிக் கொண்டு வருகின்ற வைரஸ் மூலமாகவே, அந்தக் காய்ச்சல் உருவாகிறது. ‘உங்கள் வீடுகளிலும், வீட்டுச் சூழலிலும் தேங்கி நிற்கும் நீரை அகற்றி விடுங்கள்’ என்று, நமக்கு வழங்கப்படும் அறிவுரைகளை நாம் காதில் வாங்கி, பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு அபாயத்திலிருந்து நாம் தப்பியிருக்க முடியும்.

இன்னொருபுறம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களும் உள்ளுராட்சி சபைகளும் டெங்கு அபாயம் அதிகரித்த பிறகு காட்டிய அக்கறையில் அரைவாசி அளவினையாயினும், அதற்கு முன்னர் காட்டியிருந்தால், டெங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைத்திருக்க முடியும். டெங்கு நோயின் தாக்கம் பரவலாக அதிகரித்த போதுதான், புகை விசிறும் இயந்திரங்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்கள் புறப்படத் தொடங்கினார்கள். டெங்கு அபாயம் அதிகரித்த பிறகுதான் அதிகமான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் – வீடு வீடாகச் சென்று, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதேவேளை, குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் கணிசமான உள்ளுராட்சி சபைகள் பொடுபோக்காக இருக்கின்றமையும் டெங்கு அபாயம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ‘உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் நடத்தப்படாமைதான் டெங்கு அபாயம் ஏற்படுவதற்கு காரணமாகும்’ என்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு கவனிப்புக்குரியது. இது அரசியல் நோக்கம் கொண்ட கூற்றாக இருக்கின்ற போதிலும், இதிலுள்ள உண்மையினைத் தட்டிக் கழிக்கவும் முடியாது. உள்ளுராட்சி சபைகள் இயங்கும் போது, அச் சபைகளில் அங்கத்தவர்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தமது அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி, தங்களுடைய பிரதேசத்தில் முடிந்தளவு சேவைகளைச் செய்வார்கள், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால், தற்போது நாட்டின் பல பகுதிகளில் உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. மட்டுமன்றி, அவற்றுக்கான தேர்தல்களும் பிற்போடப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, அச் சபைகளின் உத்தியோகத்தர்கள்தான் சபையினைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேற்படி உத்தியோகத்தர்கள் குப்பைகளை அகற்றுவதில் அலட்சியமாகச் செயற்பட்டால், அதனை தட்டிக்கேட்க அங்கு சபை உறுப்பினர்கள் இல்லை. மேலும், உத்தியோகத்தர்களால், ஒரு வரையறைக்குள் மட்டுமே செயற்படவும் முடிகிறது.

எனவே, கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்களை ஒத்தி வைத்துக் கொண்டிராமல், அனைத்து உள்ளுராட்சி சபைகளினதும் தேர்தல்களை உடனடியாக நடத்தி, அவற்றின் ஆட்சியினை மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் அரசாங்கம் வழங்க வேண்டும். டெங்கு அபாயம் அதிகரித்துள்ளமைக்கு உள்ளுராட்சி தேர்தல்கள் நடத்தப்படாமைதான் பிரதான காரணம் என்கிற கூற்றினை ஆட்சியாளர்கள் கவனத்தில் தமது கவனத்தில் கொள்தல் அவசியமாகும்.

கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சலினால் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தனைக்கும் சுகாதார பிரதியமைச்சர் – கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ‘வைத்தியனின் மனைவி புளுத்துச் செத்தாளாம்’ என்று கிராமப் புறத்தில் கூறுகின்றமை, இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. சுகாதார பிரதியமைச்சரின் மாகாணத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது என்பது வெட்கத்துக்குரிய செய்தியாகும்.

இதை விடவும் பாரிய, இன்னொரு அவமானமும் உள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அம்பாறை மாவட்டத்தில் டெங்கு அச்சுறுத்தல் அதிகம் நிலவிய பகுதிகளில் ஒன்றாக அட்டாளைச்சேனை பிரதேசமும் அடையாளம் காணப்பட்டது. இந்த பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் சொந்த ஊரிலேயே நிலைமை இப்படியிருந்தது என்பது மிகப்பெரும் அவமானமாகும். இதேவேNளை, அட்டாளைச்சேனையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அநேகர், அங்குள்ள பிரதேச அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் செல்கின்றனர். ஆனால், அந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் குறைபாடு நிலவுகின்றமை காரணமாக, சிகிச்சை பெறுவதில் பொதுமக்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் 05 வைத்தியர்கள் தேவையாக உள்ளபோதும், 03 வைத்தியர்களே அங்கு பணியாற்றுகின்றனர்.

டெங்கு நோயினை துரிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமைக்கு, அரச வைத்தியசாலைகளில் நிலவும் இவ்வாறான குறைபாடுகளும் காரணங்களாகும். டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகள் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கடுமையாக இருந்த காலப்பகுதியில், அங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்றிருந்தார். அதன்போது, அங்குள்ள வைத்தியசாலையொன்றின் வைத்திய அத்தியட்சகர் குறித்தும் அவரின் செயற்திறன் குறைபாடு தொடர்பிலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்கள். இது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளும் வைத்தியசாலையில் பணியாற்றுகின்றவர்களின் அசமந்த செயற்பாடுகளும், டெங்கு அபாயத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமைக்கான காரணங்களாக இருந்தன என்று கூறினால், யார் அதை மறுப்பர்.

மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் அமைந்திருக்கும் பாழ் வளவுகள் குறித்து அநேகமாக அதிகாரிகள் அக்கறை கொள்வதில்லை. குறித்த பாழ் வளவுகளில் நீண்டகாலமாகத் தேங்கும் நீரில், டெங்கு வைரஸினை பரப்பும் நுளம்புகள் எக்கச்சக்கமாக உருவாகின்றன. அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான பாழ் வளவொன்று தொடர்பிலும், அதனால் ஏற்படும் சூழல் அச்சுறுத்தல் குறித்தும் அப் பகுதியைச் சேர்ந்த மக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு பல முறை அறிவித்திருந்தனர். ஆனால், அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு கட்டத்தில், இவ்விடயம் தொடர்பாக சுகாதார பதிசோதகர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தது. தமது குடியிருப்புக்களை தாங்கள் சுத்தமான வைத்துள்ளபோதும், அருகிலுள்ள பாழ் வளவில் நிலவும் பாகமான சூழ்நிலையால், தாங்கள் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக, இதன்போது மக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த சுகாதார அதிகாரிகள்ளூ குறித்த வளவு உரிமையாளருக்கு எதிராக தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்கள். அந்த வளவு அமைந்துள்ள பகுதிக்குரிய உள்ளுராட்சி சபையினர்தான், பாழ் வளவு உரிமையாளருக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்ய முடியும் எனவும் கூறினார்கள். இது அலட்சியமான பதிலாகும். குறித்த சுகாதார அதிகாரிகள், அப் பகுதிக்குரிய பிரதேச சபையைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட வளவு உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை. இன்னொருபுறம், மக்கள் குடியிருப்புகளின் நடுவில் அமைந்துள்ள இவ்வாறான பாழ் வளவுகள் குறித்து, அப் பகுதிக்குரிய பிரதேச சபை உத்தியோகத்தர்களும் தொடர்ச்சியாக கவனம் செலுத்துதல் வேண்டும். யாரும் வசிக்காத வீடுகளிலும், பாழ் வளவுகளிலும் சுகாதார அச்சுறுத்தலுக்கான ஏதுநிலைகள் உருவாகுவதோடு, சமூக விரோத செயற்பாடுகளும் நடைபெறுவதற்கான சாத்தியங்களும் அமைந்து விடுகின்றன.

இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் விடயத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியான முறையில் செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் அதீத கவனத்துக்குரிய விடயம் என்னவென்றால், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆம்.எம். அன்வரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவார்களாவர். மேலும், டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்தான் மாகாணசபை உறுப்பினர் அன்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கு மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளையில்தான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினை அன்வர் குற்றம்சாட்டிப் பேசியிருந்தார்.

டெங்கு விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியாக செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிரான கட்சியினைச் சேர்ந்த ஒருவர் கூறியிருந்தால், அதனை ‘அரசியல்’ என்று கூறி, தட்டிக் கழித்திருக்கவும் முடியும். ஆனால், தனது கட்சியைச் சேர்ந்தவர் நிருவகிக்கும் அமைச்சினை, அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டுகின்றமையானது கவனத்துக்குரியதாகும். டெங்கு விவகாரத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு எந்த வகையிலெல்லாம் சரியாகச் செயற்படவில்லை என்பதையும், இதன்போது மாகாண சபை உறுப்பினர் அன்வர் விபரித்திருந்தார்.

மிகவும் நேர்மையாகச் சிந்தித்தால், டெங்கு காய்ச்சல் என்பதை தனியே ஒரு நோயாக மட்டும் பார்க்க முடியவில்லை. அது – நமது அலட்சியங்களுக்கான தண்டனையாகவும் இருக்கிறது. சூழலைப் பேணத் தவறிய நமது பொடுபோக்குத் தனங்களுக்கான வினையினை, டெங்கு எனும் பெயரில் நாம் அனுபவிக்கின்றோம்.

நமது வீடும், வளவும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது. சுற்றுச் சூழலும் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கான அக்கறையினை இனியாவது வளர்த்துக் கொள்வோம்.

தமிழ் மிரர்: (07 ஏப்ரல் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்