ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

🕔 March 19, 2017

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர்.

இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தெரிவிக்கையில்; இது குறித்து நடவடிக்கையினை எடுக்குமாறு, ஊடகத்துறை அமைச்சினை தான் வேண்டிக் கொண்டதாகக் கூறினார். அவ்வாறானதொரு விசாரணைதான் சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உள்ளக விசாரணைகள் நடத்தப்படும்  போது, அதில் வெளிப்படையும், நம்பகத் தன்மையும் இல்லாமல் போகும் நிலை உருவாகக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிருக்க இது பற்றி குறிப்பிடுகையில்; இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கையொன்றினை மேற்கொள்ளுமாறு, தனது அமைச்சு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

தமது மேலதிகாரியொருவரினால் தொலைபேசி மூலம் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக, நான்கு பெண் ஊழியர்கள் இவ்வாறு முறையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் திருமணமாகதவர் என்றும், தனது மேலதிகாரியின் இவ்வாறான நடத்தையானது, தனது எதிர்காலத்தினைப் பாதிக்கக் கூறுமென்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, தமது முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தாம் செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்