இலங்கை தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் தனக்குக் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சுவிஸ்ஸர்லாந்து நாடுகளின் குடியுரிமையினை மஹிந்த சமரசிங்க கொண்டிருப்பதாக, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்திருந்தமையானது, பொய்யான தகவல் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க குற்றம்சாட்டியிருந்தார்.
தனக்கு எந்தவொரு நாட்டினதும் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், ஆனால் மக்கள் பிரதிநிதி எனும் வகையில் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது 61 வயது காலத்தில், இலங்கை தவிர்ந்த வேறொரு நாட்டின் குடியுரிமையினை தான் கொண்டிருந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



