அம்பர்: கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தி

🕔 January 3, 2017

amber-9873திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, கோடி ரூபாய் வரை விலைபோகிறது.

வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் திமிங்கலம் உமிழும் வாந்தியிலிருந்துதான் அம்பர் உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.

கடலில் மற்ற உயிரினங்களை திமிங்கிலம் உணவாக உட்கொள்ளும். அதில் கூர்மையான முட்களுடன் கூடிய உயிரினங்களும் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் சென்று விடும். அப்படி செல்லும் முட்களால் திமிங்கிலத்தின் குடலுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இயற்கையாகவே திமிங்கிலத்தின் குடலில் ‘அம்பர்கிரிஸ்’ (Ambergris) என்ற வஸ்து சுரக்கிறது. இதைத் தான் நாம் அம்பர் என அழைக்கிறோம். இந்த வஸ்துவை, திமிங்கிலம் வாந்தியாக எடுத்து விடும்.

கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும். அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.

பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும். இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது.

வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு கோடி ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்