தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம்

🕔 November 29, 2016

seusl-026– றிசாத் ஏ. காதர் –

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தொழிநுட்ப பீடத்திற்கான முதலாவது தொகுதி மாணவர்கள் 160 பேர் உள்ளீர்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்டிசம்பர் 04 ஆம் திகதி பல்கலைக் கழகத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் உபவேந்தர் நாஜிம் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள தொழிநுட்ப பீடம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப பீடத்துடன், இப்பல்கலைக் கழகத்தில் 06 பீடங்கள் உள்ளன. தொழிநுட்ப பீடத்தினூடாக இருவகையான பட்டதாரிகளை உருவாக்க முடியும்.

மேற்படி தொழில் நுட்ப பீடத்தில் – விவசாய தொழிநுட்ப துறை மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறை ஆகியவை அடங்குகின்றன.

விவசாய தொழிநுட்ப கற்கை நெறிக்கு 85 மாணவர்களும், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறைக்கு 75 மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். தொழிநுட்ப பீடத்தினை முதலாவதாக ஆரம்பித்த  ஐந்து பல்கலைக்கழகங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.

இலங்கை அரசின் கல்விக் கொள்கை வகுப்புக்கு ஏற்பவே இத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். உயர் தரத்தில் அரசினால் ஏற்படுத்தப்பட்ட தொழிநுட்ப பாடநெறிகளின் பிரதிபலனாகவே, இப்பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் கலைத்துறைக்கு மாணவர்களிகன் வருகையை குறைத்து, சம காலத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப வளர்ச்சியில் இலங்கையர்களையும் இணைக்கும் ஒரு திட்டமாக இதனை பார்க்கவேண்டியுள்ளது.

இக்கற்கை நெறியானது முழுக்க முழுக்க தொழிநுட்பம் சார் பாடநெறியாக காணப்படுவதனால், ஏனைய கற்கை நெறிகளைவிட வித்தியாசமான ஒரு கற்கையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிநுட்ப பீடத்துக்கா 620 மில்லியன் ரூபாய் நிதியினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதில் புதிய கட்டிட நிர்மாணத்துக்காக 450 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், புதிய பீட மாணவர் விடுதிக்கான விடுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

விவசாய தொழிநுட்ப மாணவர்களின் நலன் கருதி மல்வத்தை பிரதேசத்தில் உள்ள பண்ணையை விவசாய பண்ணையாக அபிவிருத்தி செய்யவுள்ளோம்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தொழிநுட்ப பீடத்தின் பதில் பீடாதிபதி கருத்து தெரிவிக்கையில்;

“மாணவர்கள் தொழிநுட்ப பீடத்துக்கு தெரிவாகுவதற்காக – உயர் தரத்தில் கணித, விஞ்ஞான துறையில் தான் கற்க வேண்டும் என்ற நிலை இல்லை. மாணவர்கள் கலைத் துறையின் ஊடாக தொழிநுட்பத்துறைக்கு வரமுடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு தொழிற் துறையில் முன்னேறக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும்.

இதனூடாக கைத்தொழில் துறையினை விருத்தி செய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது” என்றார்.

தொழிநுட்ப பீடத்துக்கான அனைத்து வசதிகளும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் எந்தவித கவலையும் கொள்ள தேவையில்லை என்றும், பதில் பீடாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இச் செய்தியாளர் சந்திப்பில் தொழிநுட்ப பீடத்தின் விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.என்.எம். முபாறக், கலாநிதி செவ்வந்தி கமகே, சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.எல். அப்துல் ஹலீம் மற்றும் கலாநிதி யு.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.seusl-025 seusl-024

Comments

புதிது பேஸ்புக் பக்கம்