புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்

🕔 November 6, 2016

mansoor-09றக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை வைப்பினை, தான் ஒரு போதும் ஆதரித்துப் பேசவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை  எனவும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் செய்தியானது, அப்பட்டமான பொய் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் கூறியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் ஒலி வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, மேற்கண்ட மறுப்பினை அவர் தெரிவித்துள்ளார்.

மன்சூர் வெளியிட்டுள்ள மறுப்பு 

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையானது, என்னுடைய அனுமதியுடனேயே, வைக்கப்பட்டதாகத்தான் ஆரம்பத்தில் ஒரு செய்தியை பரப்பியிருந்தனர்.

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்றபோது, இது தொடர்பான விளக்கத்தினை வழங்கியிருந்தேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியும், வங்குரோத்தும் கொண்டவர்களாலேயே இப்படியான கட்டுக்கதை பரப்பி விடப்பட்டுள்ளதாக, அந்தக் கூட்டத்தின் நான் கூறியிருந்தேன்.

சிலை வைப்பதற்கு என்னுடைய அனுமதி ஒரு காலமும் தேவைப்படாது, அவ்வாறு வைக்கப்பட்டுள்ள சிலைகள் யாருடைய அனுமதியைப் பெற்றும் வைத்ததாக வரலாறுகளும் கிடையாது. மேலும், குறித்த சிலையானது சட்டத்தை மீறி வைக்கப்பட்டுள்ளதாகவே அந்தக் கூட்டத்தில் நான் சொன்னேன்.

குறித்த சிலை வைப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக கூறியமை உண்மையென்றால், அவற்றினை நிரூபிக்கக் கூடிய ஆவணங்களையோ, குரல் பதிவுகளையோ குற்றம் சாட்டுகின்றவர்கள் வெளியிட வேண்டும்.

மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அப்பட்டமான பொய்யினை மக்கள் விளங்கிக் கொள்வார்கள், விளங்கியிருக்கிறார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

‘புதிது’ செய்தித்தளத்தின் விளக்கம்

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியாயப்படுத்தி பேசியமை தொடர்பில், முதன் முதலாக ‘புதிது’ தளம்தான் செய்தியினை வெளியிட்டிருந்தது.

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 03ஆம் திகதி, இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே, சிலை வைப்பினை ஆதரிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குறித்த செய்தியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக,  இறக்காமம் ஒருங்கிணைப்புக் குழுவில் மன்சூர் பேசிய வீடியோ பதிவினை, நாம் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிலை வைப்பு தொடர்பாக இறக்காமம் கூட்டத்தில், தான் எதிர்ப்பினை வெளியிட்டதாக மன்சூர் கூறுகிறார்.

இதேவேளை, இந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவினை வம்புக்கு இழுப்பதன் மூலம், தனது கட்சி ஆதரவாளர்களை அரசியல் ரீதியாக சூடேற்றி, தனது சமூக துரோகத்தினை இருட்டடிப்புச் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிக்கின்றார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும், தன்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளுக்கு ஆதரங்கள் இருந்தால், அதனை வெளியிடுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் சவால் விடுத்துள்ளார்.

ஆனால், இந்தச் சவாலுக்கு முன்னதாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர், சிலை வைப்பினை ஆதரித்துப் பேசிய வீடியோவினை நாம் வெளியிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

தொடர்பான செய்தி: சிலை வைப்பை நியாயப்படுத்திய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்; மக்கள் கொதிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் வெளியிட்டுள்ள ஒலி வடிவிலான மறுப்பு

சிலை வைப்பினை ஆதரித்து, மன்சூர் பேசிய வீடியோ

(இந்த வீடியோவில் 19ஆவது செக்கன் ஆரம்பமாகும் இடம், 01 ஆவது நிமிடம் 18ஆவது செக்கன் மற்றும் 04 ஆவது நிமிடம் 25 ஆவது செக்கன் ஆரம்பமாகும் இடங்கள் மிக முக்கியமானவை)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்