பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தை, றிசாத்துடன் இணைந்து தூதுவர் பார்வை
🕔 November 6, 2016


இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும் வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார்.
மன்னாருக்கு அமைச்சருடன் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் உயர்தானிகர் மேஜர் ஜெனரல் ஷெய்ட் ஷகீல் ஹூஸைன், மன்னார் புதுக்குடியிருப்பில் தனது நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்டார்.
இதன் பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றும்போதே, வீடமைப்புத் திட்டத்துக்கு உதவும் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் தூதுவருக்கும் அமைச்சர் தனது பிரத்தியேக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
தனது உரையில் அமைச்சர் மேலும் கூறுகையில்;
“இலங்கையுடன் மிக நெருக்கமான நட்புறவைக் கொண்ட பாகிஸ்தான், இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவி நல்கி வருகிறது.
அத்துடன் இலங்கை துன்பகரமான சூழ்நிலைகளில் இருந்த காலங்களில் அந்நாடு எமக்கு கைகொடுத்து உதவியுள்ளது.
26 ஆண்டு காலம் புத்தளத்திலும் தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகளாக வாழ்நத இந்த மக்களின் இருப்பிடத் தேவைக்கு, வீடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய நிதி உதவியில் 230 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 200 வீடுகள் முஸ்லிம்களுக்கும் 20 வீடுகள் தமிழர்களுக்கும் 10 வீடுகள் சிங்களவர்களுக்கும் வழங்கப்பட்டுளள்ளன” என்றார்.
அமைச்சருடன்பாகிஸ்தான் தூதுவர் இணைந்து புதுக்குடியிருப்பு கோணார் பண்ணையில், சவூதி தனவந்தரின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள மர்கஸ் அல் இஸ்லாமியா பள்ளிவாசலுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்ததார். முன்னதாக அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றினார்.
புதுக்குடியிருப்பில் அறபு மத்ரசா ஒன்றுக்கு விஜயம் செய்த போது, அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நிர்வாகத்தினர் எடுத்துரைத்தனர்.
பின்னர் நானாட்டான் பிரிவில் சிங்கள, தமிழ் மக்களுக்கு அமைக்கப்பட்டுவரும் வீடுகளையும் அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வுகளில் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச செயலாளர் வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(அமைச்சரின் ஊடகப்பிரிவு)

Comments

