ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு

🕔 August 31, 2016

Hakeem+Faisal - 022– சக்கீப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் நாளை வியாழக்கிழமை பாலமுனையில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வினை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மத்திய குழு ரத்துச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்நிகழ்வில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்படி நிகழ்வினை நடத்தக் கூடாது என்றும், மு.கா. தலைவர் ஹக்கீம் மற்றும் பைசால் காசிம் ஆகியோர், நாளைய தினம் பாலமுனைக்கு வரக் கூடாது எனவும், மு.கா.வின் பாலமுனை மத்திய குழுவினரிடம், அப் பிரதேசத்திலுள்ள மு.கா. தொண்டர்கள் கடுந்தொனியில் கூறியிருந்தனர்.

இதனை மீறி, நாளைய தினம் குறித்த நிகழ்வு நடைபெறுமாயின் – தாம் அதனைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் மு.கா. தொண்டர்கள் தெரிவித்தனர்.

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், தனது அமைச்சினூடாக வழங்கவுள்ள தொழில் நியமனத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாகவும், அது குறித்து கட்சித் தலைவர் ஹக்கீம் கண்டும் காணமல் உள்ளார் எனவும், பாலமுனை பிரதேச மு.கா. தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, இன்று அவசரமாகக் கூடிய மு.காங்கிரசின் பாலமுனை மத்திய குழுவினர், அமைச்சர் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வினை ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, மு.காங்கிரசின் பாலமுனை தொண்டர்கள் இவ்வாறான முடிவனை எடுப்பதற்கு, கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான உள் முரண்பாடுகளும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.

இதேபோன்றதொரு முடிவினை, மு.கா.வின் ஒலுவில் மத்திய குழுவினரும் எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த முடிவுக்கிணங்க, நாளைய தினம் ஒலுவில் பிரதேசத்தில் – ஹக்கீம் மற்றும் பைசால் காசிம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்