ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது
கடல் வழியாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 5.5 கிலோகிராம் தங்கத்தினைக் கடத்த முற்பட்ட இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்ததோடு, தங்கத்தினையும் கைப்பற்றினர்.
மீனவர்கள் போல் வேடமிட்ட இரண்டு கடத்தல்காரர்களும், மீன்பிடி படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினைக் கடத்திச் சென்றபோதே கைதாகினர்.
காங்கேசன்துறையிலிருந்து வடக்காக 08 கடல் மைல் தூரத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும், கைப்பற்றப்பட்ட தங்கத்தினையும், யாழ்ப்பாணத்திலுள்ள சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம், கடற்படையினர் கையளித்தனர்.