
சிறைக்கைதிகளிடையே தட்டம்மை நோய் (measles) பரவியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மூன்று சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் தட்டம்மை நோய்த்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சேனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த – சிறைச்சாலை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கைதிகளை மீண்டும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் – ஆணையாளர் தெரிவித்தார்.
இதன்படி, இன்று (09) குறித்த மூன்று சிறைச்சாலைகளிலிருந்தும் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலைமை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் – சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு எழுத்துபூர்வ அறிவித்தல்களையும் வழங்கியுள்ளனர்.



